பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு !

India, News, Politics, World

 37 total views,  2 views today

பிரிட்டன் பிரதமர் பதவியில் முதல் இந்திய வம்சாவளியினர்

லண்டன் – 25/10/2022

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி – வரவு செலவுத் திட்டம் குறித்த சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியைத் துறந்தார்.

இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரையும் நாட்டின் புதிய பிரதமரையும் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.

பிரதமர் பதவிக்கானப் போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி நாடாலூமன்ற உறுப்பினர் ரிஷி சுனக், பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கானப் போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று திடீரென அறிவித்தார்.

அதன் பின்னர், போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 190க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார். ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Leave a Reply