புந்தோங் இடுகாட்டு விதிமுறையில் பாகுபாடு ! – பொது மக்களின் கேள்விக்கு பதில் கிடைக்குமா ?

Malaysia, News

 337 total views,  1 views today

– குமரன் –

ஈப்போ – 1 அக். 2022

இங்குள்ள இந்துக்கள் இடுகாட்டில் சடலத்தை எரிக்க முடியுமா அல்லது புதைக்க முடியுமா எனும் கேள்வி இப்போது பூதாகரமாக வெடித்து மக்களின் அதிருப்திக்கு உள்ளானது,

இனி, இங்கு சடலத்தை அடக்கம் செய்ய முடியாது எனவும் அதற்கு மாற்றாக தகனம் செய்ய மின்சுடலை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் யாவரும் அறிந்ததே. சில ஆண்டுகளாக இந்த விதிமுறை நடப்பில் இருப்பதாக பொது மக்களிடம் புந்தோங் இந்து இடுகாட்டை நிர்வாகித்து வரும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா – அருள்மிகு மாரியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஆனால், அண்மையில், இதற்கு மாறாக, குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் அந்த விதிமுறைகளை மீறி சடலத்தை அடக்கம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதித்து வந்ததும் பொது மக்களுக்குத் தெரிய வந்துள்ளது,

ஏன் இந்த இரட்டைத் தரச் செயல்பாடு ? ஏன் இந்தப் பாகுபாடு ? ஆளுக்கொரு விதிமுறையா ?

சிக்கல் தொடங்கிய புள்ளி

கடந்த 23 செப் 2021 ஆம் ஆண்டு குமரேசனின் தந்தையார் காலமானார். 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமது தாயார் காலமானபோது, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே இடத்தில் தமது தந்தையாரையும் அடக்கம் செய்ய ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா – அருள்மிகு மாரியம்மன் கோவில் நிர்வாகத்தின் தலைவர் விவேகாநந்தனை குமரேசன் அனுகியபோது, அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.

இனி, இந்த இடுகாட்டில் சடலத்தை அடக்கம் செய்ய முடியாது எனும் விதிமுறை கடந்த சில ஆண்டுகளாக நடப்பில் இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாரோ ஒருவருக்கு அந்த இடுகாட்டில் சடலம் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தமக்குக் கிடைத்த போது, கோயில் தலைவர் தம்மிடம் கூறியதும் இத்தனை ஆண்டுகள் நடப்பில் இருந்து வந்துள்ள விதிமுறைகளும் நேருக்கு மாறாக இருப்பது நியாயமில்லை எனக் கருதி விளக்கம் கேட்க கோயில் நிர்வாகத்தினரை அவர் அணுகியுள்ளார்.

இடுகாட்டு விவகாரம் தொடர்பில் பொறுப்பாளரான பாண்டியனை நாட வேண்டும் எனத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அவரை அணுகியபோது, காவல் துறையின் அனுமதி (பெர்மிட்) பெற்று வந்தால் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்ததாக குமரேசன் கூறினார்.

இதே காவல் துறை அனுமதியைத் தாம் பெற்று தமது தந்தையின் சடலத்தை தாயார் அடக்கம் செய்த இடத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி கிடைத்திருக்கும்தானே என குமரேசன் கேட்ட போது அவருக்குக் கோயில் நிர்வாகத்திடம் இருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

இந்த ஒரு சம்பவம் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் புந்தோங் வட்டார மக்களிடையே தற்போது எழுப்பியுள்ளது.

  1. இங்குள்ள இந்துக்கள் வீட்டில் இறப்பு நேர்ந்தால், புந்தோங் இடுகாட்டில் நல்லடக்கம் அல்லது தகனம் செய்ய என்ன (பொது)விதிமுறை ? எழுத்துப் பூர்வமான ஆவணம் இருக்கிறதா ?
  • வாய்மொழி விதிமுறைகள் மட்டும் கொடுப்பதற்குக் காரணம் ஆளுக்கொரு விதிமுறையைச் செல்ல ஏதுவாக இருக்கும் என்பதாலா ?
  • ஏற்கெனவே அடக்கம் செய்த நிலத்தில் மீண்டும் அடக்கம் செய்ய விதிமுறை இருக்கிறதா ? இல்லையா ?
  • ஒரே நிலத்தில் இரண்டு நல்லடக்கம் செய்ய கால இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும் என்பது யார் / எவ்வாறு வகுக்கப்பட்டது ?
  • இந்த விதிமுறையும் விளக்கமும் பொது மக்களுக்கு ஏன் விளக்கப்பட வில்லை ?
  • ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டக் கல்லறைகள் பராமறிப்பு என்ன நிலையில் உள்ளது ?
  • ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட நிலம் / இடம் / கல்லறை ஆகியவற்றின் பட்டியலும் ஆவணப் பதிவும் (LOT NUMBER) முறையாக சேமிக்கப்பட்டுள்ளதா ? எவ்வாறு அதனை சரி பார்ப்பது ?

இப்படி பல ஐயங்கள் புந்தோங் வட்டார மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. இது குறித்து நேற்று இரவு 7.30 மணிக்கு பொது மக்களில் சிலர் கோவில் நிர்வாக அலுவலகத்தில் அதன் பொறுப்பாளர்களைச் சந்திக்கக் கூடி விளக்கம் கேட்க முற்பட்டனர்.

ஆனால், கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள், குறிப்பாகத் தலைவருக்கு பொது மக்களின் வருகை முன்னதாகவே தெரிவிக்கப்பட்டும் இது குறித்து விளக்கமளிக்க அவர் அலுவகத்தில் இல்லை. அங்கு இருந்த பொறுப்பாளர்களில் சிலர் தாங்கள் செயலவையில் புதிதாக நியமிக்கப்பட்டதாகவும் இவ்விவகாரம் குறித்து தங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கூறினார்.

கோயில் நிர்வாகத்தினரை அடுத்த ஞாயிற்றுக் கிழமை (2-10-2022) சந்திக்க தாங்கள் ஏற்பாடு செய்வதாக அலுவலகத்தில் இருதவர்கள் தெரிவித்தனர்.

இறப்பு எப்போது வேண்டுமானாலும் நேரலாம். அது வரையில் என்ன விதிமுறை ? இறப்பு நேர்ந்த குடும்பத்தில் அந்தச் சடலத்தை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் விளக்கம் முறையாக எழுத்துப்பூர்வமாகக் கொடுக்க இந்த நிர்வாகம் மறுக்கின்றது ?

பொது மக்களுக்கு, குறிப்பாக, புந்தோங்கையே பூர்வீகமாகக் கொண்டிருப்பவர்களுக்கு நேர்ந்த அநீதி என விளக்கம் கேட்க வந்த சமூக ஆர்வலர் நளினி சுகுமாறன், மணிராஜா, முருகேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

இவர்களுக்கான நிலையான சீரான நிர்வாக – செயல்முறை கொடுக்கப்படுமா ? பொது மக்களின் ஐயப்பாடு தீர்க்கப்படுமா ? அல்லது இந்தக் குளறுபடிகள் தொடருமா ? இது மக்களின் அறியாமையா ? அல்லது அறியாமையை நிர்வாகத்தினர் சுயநலத்திற்காகப் பயன்படுத்துகின்றனரா ? அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணவத்தில் நடக்கின்ற முறைகேடலா ? நிர்வாகத்திறனற்றவர்களின் கையில் கோயில் மேளாண்மை சிக்கிக்கொண்டுள்ளதா ?

நாளை விடை காண்போம் !

Leave a Reply