பெண்களை பெருமைப்படுத்திய WOW Sentosa விருதளிப்பு நிகழ்வு

Malaysia, News

 219 total views,  5 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

பெண்கள் எப்போதும் ஆக்கசக்தியாக கருதப்படுபவர்கள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். அதன் அடிப்படையில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்தின் வாயிலாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று இன்று தங்களது வாழ்வாதாரத்தை மாற்றியமைத்து பிறருக்கு முன்னுதாரணமாக திகழும் மகளிரை கெளரவிக்கும் வகையில் WOW Sentosa எனும் நிகழ்ச்சியின் நடத்தப்பட்டது.


இந்நிகழ்விவை ஏற்பாடு செய்த சேந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் குறிப்பிடுகையில், கடந்த கோவிட் பெருந்தொற்று காலத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட மகளிருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் மட்டுமல்லாது வர்த்தகங்களில் சிறந்து விளங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அவ்வகையில் சில மகளிர் சுய தொழிலில் ஈடுபட்டு தங்களது வாழ்வாதாரத்தை மாற்றியமைத்துள்ளனர். அத்தகைய மகளிர் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திட சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டவர்களாக மாற வேண்டும் எனும் சிந்தனையிலேயே உலக மகளிர் தினத்தை முன்னிட்டு Wonderful Women of Sentosa (WOW Sentosa) எனும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு முன்னுதாரண மகளிர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.


செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்த மகளிரும் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சமூகத் தொடர்பு சிறப்பு அதிகாரியுமான குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவாரியா சூல்கிப்ளி, பெண்கள் மிகுந்த வலிமை படைத்தவர்கள். சகோதரி, மனைவி, தாய் என பல பொறுப்புகளை வகித்தாலும் எதிலும் சளைக்காம் திறம்பட சேவையாற்றுவதில் மகளிருக்கு நிகர் யாருமில்லை.


குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியிலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்கள் உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் மிகுந்த வலிமை படைத்தவர்களே. பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும்? என சிலர் கேள்வி எழுப்பலாம். ஒரு குடும்பத்தையே சுமக்கின்ற பெண்களுக்கு சிறந்த சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஆற்றல் கிடையாதா?


அரசியல் வேண்டாம் என பெண்கள் எப்போதும் ஒதுங்கி நிற்கக்கூடாது. அதுவும் நாம் களமாட வேண்டிய தளம் தான். பெண்கள் எத்துறையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க சமூகச் சேவையிலும் ஈடுபடுத்த பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

மகளிருக்கு மிகச் சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ், அவர்தம் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்வில் சமூகம், கல்வியியல், வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மகளிர்கள் கோப்பைகளும் நற்சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

Leave a Reply