பெரும்பான்மையை கொண்டுள்ளாரா முஹிடின்?

Malaysia, News, Politics

 250 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கவிழ்க்கப்பட்டு கொல்லைப்புறம் வாயிலாக அரியணையில் அமர்ந்ததாக விமர்சிக்கப்பட்ட பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன.
பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பெரும்பான்மை இழந்து விட்டது, அதனால் ஆட்சி மாற்றம் அவசியம் என்று எதிர்க்கட்சியினர் கொக்கரத்துக் கொண்டிருக்கின்றனர்.


எனக்கு இன்னமும் பெரும்பான்மை உள்ளது. நானே பிரதமராக நீடிப்பேன். என்னை யாரும் பதவி விலகச் சொல்ல வேண்டாம். தாமாகவே முன்வந்து நானும் பதவி விலகுவேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். எனக்கான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிப்பேன். செப்டம்பரில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
அம்னோவின் நிழலில் ஆட்சியமைத்த பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி இப்போது தள்ளாடி கொண்டிருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதே அம்னோதான். முஹிடின் யாசினுக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்வதாக அம்னோ அறிவித்திருந்த நிலையில் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டதற்கான உறுதிமொழி கடிதத்தில் 12 அம்னோ எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். அது மட்டுமல்லாது அம்னோ எம்.பி. இருவர் அமைச்சரவையிலிருந்தும் விலகி உள்ளனர்.

இவ்வளவு குளறுபடிகள் நிறைந்து காணப்படும் மலேசிய நெருக்கடியில் உண்மையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை முஹிடின் பெற்றுள்ளாரா? என்ற கேள்விக்கு விடை காண்பது குழப்பமாக உள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ள எண்ணிக்கை தற்போது வரை 103ஆக மட்டுமே உள்ளது. பெர்சத்து 31, பாஸ் 18, ஜிபிஎஸ் 18, மஇகா 1, மசீச 2, பிபிஆர்எஸ் 1, பிபிஎஸ் 1, சுயேட்சை உறுப்பினர்கள் 4, அம்னோ ஆதரவு அணி 26 என்ற எண்ணிக்கையில் மட்டுமே பெரிக்காத்தான் நேஷனல் அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளது.
பெரிக்காத்தான் நேஷனலுக்கு எதிராக கெ அடிலான் 36, ஜசெக 42, அமானா 11, வாரிசான் 8, பிஎஸ்பி, 2, அப்கோ 1, பெஜுவாங் 4, மூடா கட்சி 1, அம்னோ எதிர்ப்பு அணி 12 என்ற எண்ணிக்கையில் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி திரண்டு நிற்கின்றனர்.
இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தனக்கான பெரும்பான்மை உள்ளது என்பதை பிரதமர் முஹிடின் யாசின் எவ்வாறு நிரூபிக்கப் போகிறார்? இல்லையேல் போதிய ஆதரவு பெறுவதற்கு ‘தவளை அரசியலுக்கு’ பேரம் பேசப்படுமா? அப்படியே பேரம் பேசினாலும் உடையப்போவது பிகேஆரா? ஜசெகவா?, இப்போது எதிரணியில் உள்ள முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முஹிடினுக்கு ஆதரவாக ‘பல்டி’ அடிப்பாரா? போன்ற பல கேள்விகளும் அரசியல் அதிரடிகளும் செப்டம்பர் வரை தொடர்கதையாக நீடிக்குமா?

Leave a Reply