பொங்கல், தீபாவளி கொண்டாட்ட விரயங்களை கல்வி உதவித் திட்டங்களாக உருமாற்றினேன் – கணபதிராவ்

Malaysia, News, Politics

 334 total views,  1 views today

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தெருவெங்கும் பொங்கலையும் மாதம் முழுவதும் தீபாவளியையும்  கொண்டாடுவதால் நமது கலாச்சாரம் உச்சத்திற்கு சென்று விடாது. அதற்கு செலவழிக்கும் பணத்தை இந்திய மாணவர்களின் கல்விக்கு செலவிடுவதால் கல்வி கற்ற சமுதாயமாக இந்திய சமுதாயம் உருமாறும் எனும் நோக்கில் பொங்கல், தீபாவளி கொண்டாட்டங்களை குறைத்து அதற்கான நிதியை இந்திய மாணவர்களின் கல்வி நலனுக்கு செலவிட்டேன் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

இந்திய மாணவர்களின் கல்வி நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்தேன். மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றபோது பொங்கல், தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பணம் விரயமாவதை தடுத்து அந்நிதியை மாணவர்களின் கல்வி நலனுக்கு திசை திருப்பினேன்.

அதன் அடிப்படையில் 2014இல் பேருந்து கட்டணமாக  450 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வெ.300 வீதம் வெ.1 லட்சத்து 35 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில் இவ்வாண்டு 3,296 மாணவர்களுக்கு வெ.9 லட்சத்து 80 ஆயிரத்து 700 ரிங்கிட் மாணவர்களுக்கு பேருந்து கட்டணமாக வழங்கியுள்ளோம்.

அதேபோன்று உயர்கல்வி மாணவர்களுக்கு தொடக்க நிதியில் 14 பேருக்கு உயர்கல்வி நிதி வழங்கினோம். அது கடந்தாண்டு 262 மாணவர்களுக்கு வழங்கும் மாபெரும் திட்டமாக உருவெடுத்தது. இவ்வாண்டு உயர்கல்வி நிதிக்கு 500 மாணவர்கள் வின்ணப்பித்துள்ளனர். கூடிய  வரை பெரும்பாலான மாணவர்களுக்கு உதவிநிதி வழங்குவதற்கு ஏதுவாக கூடுதலாக வெ. 10 லட்சம் நிதியை மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரியிடம் கோரியுள்ளதாகவும் அது கிடைக்கும் நம்பிக்கை இருப்பதாகவும் கணபதிராவ் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் நாங்கள் செய்துள்ள செலவீனத்திற்கு முறையான கணக்குகளை வைத்துள்ளோம். அதில் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை என்று தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியம் வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசும்போது கணபதிராவ் இவ்வாறு கூறினார்.

விளம்பரம்

Leave a Reply