
பொதுத் தேர்தல் தேதி : அமைச்சரவையில் இரு அணிகளா ?
181 total views, 1 views today
– குமரன் –
கோலாலம்பூர் – 22 செப் 2022
நாட்டின் பொதுத் தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்ட போது, ஒருமித்தக் கருத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் போனதாக தகவல்கள் வெளீயாகியுள்ளன.
நேற்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமை ஏற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டதில், ஒரு தரப்பு இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இன்னொரு தரப்பு அதனை மறுப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை உத்துசான் மலேசியா வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டிறுதி வெள்ளப் பிரச்சனையையும் பொருளாதாரச் சிக்கலையும் முதலில் எதிர்கொள்ள வேண்டும் என பெர்சத்து, பாஸ் ஆகியக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கருத்துரைத்ததாக பெயர் குறிப்பிடப்படாத அமைச்சர் ஒருவர் கூறியதையும் அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது.
அதே சமயம், அக்தோபர் 7 ஆம் நாள் தாக்கல் செய்யப்பட உள்ள 2023 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கைக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடாது எனவும் சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
வரவு செலவுத் திட்ட அறிக்கைக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அரசாங்கத்திற்குப் பெருத்த நட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாண்டே தேர்தல் நடத்தப்படவேண்டும் என சில அம்னோ அமைச்சர்கள் வலியுறுத்தி வந்துள்ள நிலையில் தேசியக் கூட்டணி (PN) அமைச்சர்கள் சில அதனை மறுத்துள்ளதாகவும் அந்த பெயர் வெளீயிட விரும்பாத அமைச்சர் சொன்னாராம்.
எனினும், நாடாளுமன்றம் கலைக்கப்படும் முடிவை அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டறிந்த பின்னர் எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.