பொருளாதாரத்தில் தொடர்ந்து சரிவு காணும் இந்தியர்கள் -சார்ல்ஸ், குணராஜ் குற்றச்சாட்டு

Malaysia, News, Politics

 329 total views,  1 views today

கிள்ளான்-

ரா.தங்கமணி

மலேசிய இந்தியர் செயல் திட்ட வரைவை அமலாக்கம் செய்யாமல் அதனை வெறும் அறிவிப்பாக மட்டுமே வைத்திருந்ததில் மலேசிய இந்திய சமூகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.


மலேசிய இந்தியர் செயல் திட்ட வரைவு (Malaysia Indian Blueprint) கடந்த 2017இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022இல் இந்திய சமுதாயம் பொருளாதாரம், வணிகம், கல்வி, குடும்ப வருமானம், சமூகவியல், சமூகநலன் உட்பட பல்வேறு நிலைகளில் பின்தங்கி இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
2017இல் எம்ஐபி அறிமுகப்படுத்தப்பட்டாலும் எந்தவொரு செயலாக்கமும் இல்லாமல் வெறும் அறிவிப்பாக மட்டுமே இருப்பது இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.


அண்மையில் நடத்தப்பட்ட மலேசிய இந்தியர்களின் மேம்பாடு உருவாக்க கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட கருத்தாய்வில் இந்திய சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் இன்னும் அதிகமாக உள்ளன என்பது தெளிவாக தெரிகிறது.

ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் வெளிவரும் தரவுகளில் பொருளாதார நிலையில் இந்திய சமுதாயம் பின்தங்கியுள்ளதையும் இந்தியர்களின் சராசரி வளர்ச்சி பிற இனங்களை காட்டிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.


2017-2019 வரையிலான சராசரி வருமான வளர்ச்சி (குடும்ப வருமானம்) 5.3%ஆக இருந்தது. வேலை வாய்ப்பின்மை 2017இல் 4.7%இல் இருந்து 2019இல் 5.2ஆக அதிகரித்தது. ஏழ்மை ஒழிப்பிலும் இந்தியர்கள் மிக குறைந்த மாற்றத்தையே அடைந்துள்ளனர். 0.7% அளவே இந்தியர்களிடையேயான ஏழ்மை நிலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 5.5% இல் (2017) இருந்து 4.8%ஆக (2019) மட்டுமே குறைந்துள்ளது.


அதேபோன்று பெருந்தொற்று, பொருளாதார மந்நநிலை ஆகியவை ஏற்படுத்திய தாக்கங்களுக்கு மத்தியில் நகர்ப்புற இந்திய குடும்பங்கள் நகர்ப்புற பூமிபுத்ராக்களின் குறைந்த வருமானத்தை காட்டிலும் வெ.100.00 குறைவாக ஈட்டுகின்றனர்.

எம்ஐபி வெளியிடப்பட்டதிலிருந்து தற்போது வரையில் இந்திய சமுதாயத்தினரிடையே பணக்காரர்களுக்கும் ஏழ்மையில் உள்ளவர்களுக்குமான பொருளாதார சமமற்ற இடைவெளி கூடியுள்ளது. இந்த இடைவெளி ஆண்டிற்கு 2.5% அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது 16% இந்திய குடும்பங்களின் மாத வருமானம் வெ.3,000.00க்கும் குறைவானது. இது நாட்டின் வருமானத்தில் வெறும் 4.6% ஆகும் என்று அவர்கள் கூறினர்.

மேலும் இந்திய சமுதாயத்தில் வெறும் 14.3% மட்டுமே தொழில்முனைவர்களாக உள்ளனர். இது பிற இனத்தை காட்டிலும் மிக குறைந்த அளவாகும். இவர்களில் 91% மிக சிறுதொழில் வணிகர்கள் ஆவர். முறையான ஆதரவும் வாய்ப்புகளும் இன்றி இளம் இந்திய தொழில் முனைவர்களால் தங்களின் வணிகத்தை விரிவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்திய சமூகச் செயலாக்கத் திட்டத்தின் அணுகுமுறையை மீளாய்வு செய்ய வேண்டும். தெராஜூ போன்ற சிறப்புப் பிரிவினை உருவாக்கி மலேசிய இந்தியர்களுக்கு வணிகத் துறையில் சம வாய்ப்புகளை வழங்க வழிவகை காண வேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், செயல் திட்டங்கள், வாய்ப்புகள், பயன்கள் போன்றவற்றின் செயலாக்கங்களின் விளைவுகளை கண்காணிக்கும் வண்ணம் திறமையான, பொறுப்பான்மையுடைய, வெளிப்படையான ஒர் மையக்குழுவை அரசு அமைக்க வேண்டும்.

அதை விடுத்து இந்திய சமுதாயத்திற்காக வகுக்கப்படும் திட்டங்களை வெறும் அறிவிப்பாக மட்டுமே வைத்திருக்காமல் அதனை செயல் வடிவம் காணச் செய்வதே அரசாங்கம் தங்களின் கடமையாகக் கொள்ள வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ, குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் வலியுறுத்தினர்.

Leave a Reply