போலி சாட்சியத்தை மிரட்டி எழுத வைக்கும் தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியை ? – பொங்கி எழுந்த மாணவியின் பெற்றோர்

Crime, Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 281 total views,  7 views today

– குமரன் –

கோம்பாக் – 2 செட்டம்பர் 2022

இங்குள்ள தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மிரட்டி போலி சாட்சியத்தை எழுத வைத்த சம்பவம் நடந்ததில் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் கல்வி அமைச்சில் புகார் அளித்துள்ளார்.

போலி சாட்சியத்தை ஒரு மாணவியைக் கொண்டு எழுத அப்படி என்ன நேர்ந்தது என்பதை கால வரிசைப்படி காண்போம்.

தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளிக்குப் புதிதாக வந்த இந்தத் தலைமை ஆசிரியையின் அதிகார முறைகேடல்களையும் தவறான நடவடிக்கைகளையும் கேள்வி கேட்கும் ஆசிரியர்களை தமது பதவி அதிகாரத்தைக் கொண்டு மிரட்டியும் மறைமுகமாகத் தாக்கியும் வந்துள்ளார்.

இது அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் மத்தியிலும் மோசமான எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. ஏற்கெனவே அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க விவகாரமும் கல்வி அமைச்சின் பார்வைக்கு வந்ததில் முந்தையச் செயலவையை முழுமையாகத் தடை செய்து இடைக்கால செயலவையை உருவாக்கியது.

நிலைமை இவ்வாறு இருக்க, குறிப்பிட்டு ஒரு மாணவி அப்பள்ளியைப் பிரதிநிதித்து மாவட்ட – மாநில நிலையிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில்  அப்பள்ளியின் ஆசிரியரின் உதவியுடன் கலந்து கொண்டார். அதில் கலந்தும் கொண்ட ஒரே இந்திய மாணவர் இவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், இப்பள்ளியைப் பிரதிநிதித்து ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்து கொண்ட முதல் மாணவியும் இவரே ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், அந்த மாணவியின் ஆர்வத்தையும் முயற்சியையும் அப்பள்ளியின் மேல்மட்ட நிர்வாகம் சற்றும் மதிக்காததோடு அவரைப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியரையும் கண்டித்துள்ளார் அந்தத் தலைமை ஆசிரியர்.

தகுந்த விளக்கம் கொடுக்கப்படாததால் தாம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மலேசியக் கல்விக் கொள்கைப்படி எல்லா மாணவர்களையும் சமமாகப் பார்க்கப்ப்பட வேண்டும். ஆனால், ஏன் இந்த மாணவி ஒடுக்கப்படுகிறார் ? குறிப்பிட்டு சில மாணவர்களுக்குத்தான் போட்டிகளில் பங்கு கொள்ளவும் அதனை அங்கீகரிக்கப்படவும் வாய்ப்பு வழங்கப்படும் அரசியல் இப்பள்ளியில் நடக்கிறதா ?

மேலும், போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மீது போலியானப் புகாரை எழுதிக் கொடுக்கும்படி குறிப்பிட்ட அந்த மாணவியை பள்ளி – வகுப்பறை மதிப்பீட்டு நேரத்தில் தமது அலுவலகத்திற்கு வரவழைத்து மிரட்டியும் இருக்கிறார் அந்தத் தலைமை ஆசிரியை. இதனால், அந்த மாணவி தமது மதிப்பீட்டிலும் சரியாகச் செயல்பட முடியாமல் போயிருக்கிறார்.

தலைமை ஆசிரியையின் மிரட்டலுக்கு வேறு வழியில்லாமல் அடி பணிந்த அந்த மாணவி அவர் சொல்வது போல் எழுதிக் கொடுத்து விட்டு தமது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி இருக்கிறார்.

போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மீது என்ன போலியான சாட்சியம் உருவாக்கப்படுகிறது ?

முன்னதாக, இந்தத் தலைமை ஆசிரியையின் அதிகார முறைகேடல்களையும் விதிமீறல்களையும் கேள்வி எழுப்பியதாலும் தமது விருப்பத்திற்குச் செயல்படாததாலும் முன்பகையைத் தீர்த்துக் கொள்ள இவ்வாறான இழி செயலில் அந்தத் தலைமை ஆசிரியை இறங்கி இருப்பதும் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது.

இந்தத் தலைமை ஆசிரியையின் ஆணவ ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எண்ணிய அந்த மாணவியின் பெற்றோர், இவ்விவகாரத்தைக் குறிப்பிட்டு கல்வி அமைச்சுக்கும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட அந்த மாணவிக்கு கவுன்சலிங் எனப்படும் (மனநல) ஆலோசனை கொடுக்கப்பட வேண்டும் என அதற்குரிய ஆசிரியரையும் இந்தத் தலைமை ஆசிரியை பணித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எந்தவிதமான பிரச்சனையும் இல்லாதத் தமது மகளுக்கு இப்படி ஒரு ஆலோசனை வகுப்பு நடத்தி அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பள்ளியில் இந்தத் தலைமை ஆசிரியை சித்தரித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது எனக் கூறும் அப்பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

MSSD எனப்படும் கல்வி இலாகாவின் போட்டிக்குச் செல்லும் இப்பள்ளி மாணவியின் முயற்சியைக் குறிப்பிட்டு அடக்குவதும் ஒடுக்குவதும் ஏன் ?

மன நல அடிப்படையில் இந்த மாணவிக்கு தலைமை ஆசிரியை ஆலோசனை வழங்கச் சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து போகலாமா ?

கல்வி இலாகா அல்லாதப் போட்டிகளில் இப்பள்ளி மிகவும் மும்முரமாகக் கலந்து கொள்ள ஏன் பல தடபுடலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ?

இந்த ஒரு தலைமை ஆசிரியை மீது பல புகார் இருந்தும் ஏன் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை ? எப்போது எடுக்கும் ? எடுக்குமா ?

தமது சொந்த விருப்பத்திற்கு ஆட்டம் போடும் இந்தத் தலைமை ஆசிரியையின் ஆட்டம் எப்போது அடக்கப்படும் ?

அல்லது தமது அதிகாரத்தையும் ஆளுமையையும் பயன்படுத்தி இந்த விவகாரத்தை அந்தத் தலைமை ஆசிரியை மூடி மறைத்திடுவாரா ?

குறிப்பிட்டு இப்பள்ளியைத் தொடர்புப்படுத்தி தவறானத் தகவல்களை ஐ சேனல் வெளியிட்டு வருவதாக ஒரு தரப்பு கூறி வருகிறது. அவ்வாறாயின், நீதிமன்ற வழக்கைச் சந்திக்க நேர்ந்தால், அனைத்து ஆதாரங்களையும் ஐ சேனல் அங்கு கொடுக்கத் தயாராக இருக்கிறது.

Leave a Reply