மஇகா தேர்தல்; உதவித் தலைவர் பதவிக்கு போட்டி கடுமையாகலாம்?

Malaysia, News, Politics, Uncategorized

 264 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

மஇகாவின் புதிய நிர்வாக செயற்குழுவுக்கான தேர்தல் விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் உதவித் தலைவருக்கான போட்டி இம்முறை கடுமையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இம்முறையும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது துணைத் தலைவராக இருக்கும் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மஇகாவின் பிரதிநிதியாக ஆளும் அரசாங்கத்தில் இருப்பதால் அவருக்கு மரியாதை அளிக்கப்படும் வகையில் துணைத் தலைவர் பதவியை போட்டியில்லாமல் தக்கவைத்துக் கொள்ளக்கூடும்.

ஆனால் 3 உதவித் தலைவர்கள் பதவிக்குதான் இப்போது போட்டி கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. நடப்பு உதவித் தலைவர்களாக உள்ள செனட்டர் டத்தோ டி.மோகன், டத்தோ எஸ்.சிவராஜ், டத்தோ டி.முருகையா ஆகியோர் தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ள போட்டியிடக்கூடும்.

அதே வேளையில் இம்மூவரை தவிர்த்து இன்னும் பல பேர் உதவித் தலைவர் போட்டியில் களமிறங்கலாம். குறிப்பாக மத்திய செயலவை உறுப்பினர்களாக உள்ள பலர் உதவித் தலைவர் பதவிக்கு குறிவைத்து காய்களை நகர்த்தக்கூடும்.


அடுத்தாண்டு நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு முன்னோட்டமாக மஇகாவின் உதவித் தலைவர் பதவியை பலர் குறிவைத்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று மத்தியில் மஇகாவின் தேர்தல் களமும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply