மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சியினரின் தந்திரம் இனியும் பலிக்காது ! – வீரன்

Malaysia, News, Politics

 110 total views,  1 views today

– இரா. தங்கமணி –

கோலாலம்பூர் – 1 அக். 2022

நாட்டில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தபோது மக்கள் தீர்ப்புக்கு வழிவிட பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குரல் உயர்த்திய எதிர்க்கட்சி கூட்டணியினர் இப்போது மழை காலத்தை காரணம் காட்டி பொதுத் தேர்தல் இப்போது நடத்தக்கூடாது என எதிர்ப்புக் குரல் விடுப்பது ஏன்? என்று மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் கேள்வி எழுப்பினார்.

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தமது பலவீனத்தால் 22 மாதங்களிலேயே ஆட்சியை இழந்தது.

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைத்தபோது மக்களின் வாக்குரிமைக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த மக்களிடம் அதிகாரம் வழங்கப்படும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலுக்கு வழிவிட வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சிக் கூட்டணியினர் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

இப்போது எப்போது வேண்டுமானாலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படும் வேளையில் நவம்பர் மாத மத்தியில் பெருமழை பொழியலாம் என கணிக்கப்படுவதால் பொதுத் தேர்தல் இப்போது நடத்தக்கூடாது என எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நிலையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே மக்களின் வாழ்வாதாரமும் நாட்டின் பொருளாதாரமும் சீராகும் என வலியுறுத்தி பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சியினர், தோல்வி பயத்தின் காரணமாக தேர்தலை சந்திக்க அஞ்சுகின்றனரா? என்று தைப்பிங் தொகுதி மஇகா தலைவருமான வீரன் கேள்வி எழுப்பினார்.

மக்கள் இப்போது விழித்துக் கொண்டுள்ளனர். கடந்த காலத்தை போன்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்கள் ஏமாற்றும் தந்திரம் இந்த தேர்தலில் பலிக்காது என்பதை எதிர்க்கட்சியினர் உணர்ந்துக் கொண்டதாலேயே தேர்தலை இப்போது சந்திக்க பயப்படுகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.

Leave a Reply