மக்கள் நலனே முதன்மை ! – கிளினிக் மெடிக் கியூ-உடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்திய சாங் லி காங் !

Malaysia, News, Politics, Polls, Uncategorized

 55 total views,  1 views today

– குமரன் –

சிலிம் ரிவர் – 18/11/2022

மக்கள் நலன் முக்கியம். அதிலும் குறிப்பாக மக்கள் உடல் நலத்துடன் இருக்க வேண்டும். இவ்வட்டாரத்தில் பி40 மக்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைத் தேவைகளீல் சுகாதாரமும் ஒன்று என்பதை உணர்ந்து சேவையாற்றி வருகிறேன் என்கிறார் நம்பிக்கைக் கூட்டணி PAKATAN HARAPANனைச் சேர்ந்த தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சாங் லி காங்.

கல்வி, சமயம், வாணிகம், பொருளாதாரம், சமூக மேம்பாடு, அடிப்படை வசதிகள் ஆகியவற்றோடு சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் தாம் இந்த ஒரு வார மருத்துவ முகாமை சிலிம் ரிவரில் அமைந்துள்ள கிளினிக் மெடிக் கியூ-உடன் இணைந்து ஏற்பாடு செய்ததாக சாங் லி காங் சொன்னார்.

மக்கள் அதிகமாக இருக்கும் நகர் பகுதி மட்டும் இல்லாமல் அடிப்படை வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பட வேண்டும் எனும் நோக்கில் புறநகர் பகுதிகள், தொலைப்பேசி – இணைய வசதி கிடைக்காத பூர்வக் குடி மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் இந்த இலவச மருத்துவ முகாமை நடத்தி வந்தனர்.

பெருந்தொற்றுக் காலம் மட்டும் இல்லாமல் அதன் பிறகும் மக்கள் சுகாதாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் பல நோய்கள் தாக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், தொடர்பு முடங்கி இருக்கும் இது போன்ற புறநகர் பகுதிகளில் வேறு ஏதேனும் நோய்ப்பரவலோ அல்லது சுகாதாரப் பிரச்சனையோ இருந்தால் உடனடியாக வெளியில் தெரிவது இல்லை. எனவேதான், எல்லா தரப்பு மக்களும் விடுபட்டிடாமல் இந்த முன்னெடுப்பு அமைந்திருந்ததை சாங் லி காங் சுட்டிக் காட்டினார்.

வெறும் கண்துடைப்பாக இல்லாமல் அம்முகாமிற்கு வந்த ஒவ்வொருவரையும் நேரடியாகச் சந்தித்து அவர்களை நன்கு பரிசோதித்து அடுத்தக்கட்டத் தொடர் சிகிச்சை குறித்து விளக்கமும் ஆலோசனையும் வழங்கினார் கிளினிக் மெடிக் கியூவைச் சேர்ந்த மருத்துவர் ஜானகி.

சுகாதாரம் – மருத்துவம் அனைவருக்கும் பொதுவானது. இதில் இன – மத பாகுபாடு கிடையாது. நல்ல மருத்துவம் கிடைக்கப்பெறும் வாய்ப்பு குறைவாக இருக்கும் எல்லோருக்கும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கட்டாயமாகப் போய் சேர வேண்டும் நோக்கில் செயல்பட்டு வரும் மருத்துவர் ஜானகி, முகாமிற்கு வந்த ஒவ்வொருவரையும் அன்போடு வரவேற்று பொறுமையாக கவனித்து முழு விளக்கம் கொடுத்தார்.

  • சுங்காய் வட்டாரத்தில் கம்போங் ஹெண்ட்ரா,
  • பீடோரில் தாமான் பீடோர் ஜெயா,
  • சுங்கை லெம்பிங் பூர்வக் குடிமக்கள் கிராமம்,
  • போஸ் கெடோங் பூர்வக் குடிமக்கள் கிராமம்
  • போஸ் தெனாவ் பூர்வக் குடிமக்கள் கிராமம்
  • சுங்கை ஜெந்துங் பூர்வக் குடிமக்கள் கிராமம்
  • பேராங் 2020

ஆகிய வட்டாரங்களில் இந்த இலவச மருத்துவா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் ஏறத்தாழ 880க்கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு தங்களின் உடல் சுகாதாரம் குறித்து இலவசமாகப் பரிசோதனை செய்த கொண்டதாக மருத்துவர் ஜானகி மேலும் சொன்னார்.

கரடு முரடானப் பாதை, தொலைபேசி – இணைய இணைப்பு இல்லை, நகருக்கு அப்பால் 40 கிலோ மீட்டர் தூரம் எனப் பல தடைகளைத் தாண்டியுள்ள மக்களைச் சந்தித்தது தமக்குப் புதிய அனுபவமாக இருந்ததாக டாக்டர் ஜானகி பகிர்ந்து கொண்டார்.

இந்த இலவச அடிப்படை மருத்துவப் பரிசோதனையை தொடர்ந்து அவ்வப்போது ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக கிளினிக் மெடிக் கியூ குழுவினர் தெரிவித்தனர்.

Leave a Reply