மருத்துவ முதலுதவி பொருட்களை வழங்குவதில் முன்னுரிமை காட்டுக- பினாங்கு இந்து இயக்கம்

Malaysia, News

 283 total views,  3 views today

டி.ஆர்.ராஜா

பட்டர்வொர்த்-

நாடெங்கிலும் தற்போது அவசரகால நிலை பரவலாக கடைப்பிடித்து வரும் வேளையில் மக்களுக்கு நிறைய உணவுப் பொருட்கள் தான் தானமாக கிடைத்து வருகிறது. இது நன்கொடையாளர்களின் தாராள மனதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் முக்கியமாகத் தேவைப்படும் மருத்துவ உதவிகள் ஏழை மக்களுக்கு கிடைப்பது அரிதாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என்று பினாங்கு இந்து இயக்கத்தின் தலைவர் ப.முருகையா தெரிவித்தார்.

‘முதலுதவிக்கு’ தேவையான அடிப்படை மருந்துகளான 1.வைட்டமின் ‘சி’, முகக் கவசம், சானிடைசர் எனும் கைகளுக்கு பாதுகாப்புத் திரவியம், சிறு வெட்டுக் காயங்களுக்கு பிளாஸ்டர் எனப்படும் மருந்தொட்டிகள், ரப்பர் கையுறைகள், பூச்சிக் கொள்ளி மருந்துகள், விசப்பூச்சி கடிகளுக்கு தேவைப்படும் தோலில் தடவும் திரவியங்கள். திடீர் உடல் நலச் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளுக்கு தேவையான மாத்திரைகள், காற்று மருந்துகள் போன்ற அடிப்படை மருந்துகளை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இது பலரது வீடுகளில் இல்லாது கண்டு பினாங்கு இந்து இயக்கம் அதிர்ச்சி கொள்கிறது.

இந்த அவசர காலத்தின் போது அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள்ளாகவே மூடிவிட வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. நடுராத்திரியில் வீட்டில் அவசர உதவிக்கு இது போன்ற மருந்துகள் வைத்திருக்கும் பழக்கம் பலருக்கும் இல்லை. ஆகவே இது போன்ற முதலுதவி மருந்துகளை ஒரு சிறிய பெட்டகத்தில் வைத்து எடுக்கும் பழக்கம் பழகிவர வேண்டும் என்ற நோக்கில் பினாங்கு இந்து இயக்கமும், சிவ சாந்தா மருத்துவ முதலுதவி சேவை மையமும் இணைந்து கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றனர்.

அதாவது – கருனை மனம் கொண்ட மக்களும், பொது நிறுவனங்களும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் இணைத்து எங்களைப் போன்ற சேவை இயக்கங்களுக்கு தானமாக கொடுத்து உதவ முன் வர வேண்டும் என்பதே எங்களின் அன்பு வேண்டுகோளாகும். நீங்கள் வழங்கும் இந்த அனைத்து மருந்துகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ‘முதலுதவிப் பெட்டி’ ஒன்றையும் இதனுடன் சேர்த்து வழங்கினால் பேருதவியாக இருக்கும். இதில் முக்கியமாக நன்கொடையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது! ஒவ்வொரு மருந்தும் அதன் காலாவதித் தேதியை உறுதிப்படுத்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும். எனவே நல்ல இதயம் கொண்ட நன்கொடையாளர்கள் எங்களை அழைத்து மேல் விபரங்களை அறியலாம் என்று முருகையா (0164449246) தெரிவித்தார்.

Leave a Reply