மலேசியக் கவிஞர்களின் படைப்புகளைத் தாங்கி மலரும் “உளமுற்ற தீ” புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

Malaysia, News

 166 total views,  1 views today

கோலாலம்பூர் | 12-12-2022

ப.ராமு அறக்கட்டளையின் ஏற்பாட்டில், புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு 18/12/2022 -இல், காலை 9.30மணி முதல் , தலைநகர் ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில், ப.இராமு அறக்கட்டளை தோற்றுநரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும்,  ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு சரவணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. 

மறைந்த மந்திரக் கவிஞன் ப.இராமுவின் பெயரில் அறக்கட்டளை தொடங்குவேன் என்று மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு சரவணன் அவர்கள் கடந்த ஆண்டு அறிவித்தார். ப.இராமுவின் மறைவிற்குப் பின்னால் ஏப்ரல் 2021-இல் வெளியான அவரது “மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா” நூல் வெளியீட்டில் இந்த அறிவிப்பைச் செய்தார்.

கவிஞர் ப.ராமு புதுக்கவிதைத் துறையில் சிறந்து விளங்கியவர் என்பது யாவரும் அறிந்ததே. 1980 களின் இறுதியில் எழுதத் தொடங்கிய ப.ராமு தன் வாழ்நாள் முழுதும் எழுத்தையே மூச்சாகக் கொண்டு, இலக்கிய உலகத்திற்கு 13 நூல்களை வழங்கியுள்ளார். கவிதையே தவமாய் வாழ்ந்த கவிஞர் ப.ராமு பிப்ரவரி 19, 2021-இல் இயற்கை எய்தினார்.

தலைநகரில் நடைபெற்ற  எல்லா நூல் வெளியீடுகளிலும் தன் மகன்களோடு தவறாமல் கலந்து கொள்வார். தமிழ், எழுத்து, கவிதைகளில் அதீத மோகம் கொண்டவரான ப.இராமு.

மண்ணிலிருந்து விண்ணுக்கு ஒரு கவிதை நிலா நூல் வெளியீட்டின்போது ப.இராமு குறித்து மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு சரவணன் ஆற்றிய உரை உணர்ச்சிகளின் உற்சவம்.

‘கவிஞர் ப.இராமுவின் இழப்பு, கவிதை உலகிற்குக் குறிப்பாக புதுக்கவிதை உலகிற்குப் பேரிழப்பு என்பதை மலேசிய இலக்கிய உலகம் அறியும், எழுத்தாளர்கள் உணர்வார்கள்.

ப.இராமுவின் எழுத்து அனைவரிடமும் பேசும். அவரது எழுத்தில் இலக்கணம் இருக்கிறதா என்பதைவிட இதயம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார் என்பதை கவிஞரே பதிவு செய்துள்ளார். நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் கனக்கிறது.’

மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு சரவணன் அவர்கள்,  ப.இராமுவிடம் தான் கொண்டிருந்த நெருக்கமான நட்பையும், பாசத்தையும், அந்த இரவாக் கவிஞனுக்கு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏக்கத்தையும் அவ்விழாவில் வெளியிட்டார். ப.இராமுவின் இலக்கியப் பணிக்கு  அங்கீகாரம் வழங்கும் வகையில், கவிஞர் ப.இராமுவின் பெயரில் ‘அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது.

தமது நேரடி பார்வையில், இலக்கியப் படைப்புகளை உருவாக்கி  ப.இராமுவின் பெயரில் வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று டத்தோ ஶ்ரீ மு சரவணன் அறிவித்தார்.  ஆண்டுக்கு இரு கவிதை நூல்களின் தொகுப்பு முறையே, மரபுக்கவிதை – புதுக்கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியிடப்படும் என  தீர்மானிக்கப்பட்டது.

ப.ராமு அறக்கட்டளையின் முதல் முயற்சியாக மரபுக்கவிதைத் தொகுப்பு நூல், 62 கவிஞர்களின் 122 கவிதைகளைத் தாங்கி கடந்த ஜுன் மாதம் வெளியீடு கண்டது.

தங்களது படைப்பு பதிப்பாக வெளிவர வேண்டும் எனும் கவிஞர்களின் கனவு, நினைவாகும் தருணம் இது. அமரர் கவிஞர் ப.இராமு ஆசிகளோடு உங்களைச் சந்திக்க வருகிறது, “உளமுற்ற தீ – இலக்கிய வானில் மலேசிய புதுக் கவிதைகள்”.

உளமுற்ற தீ” புதுக்கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

நாள் : 18 டிசம்பர் 2022 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 9.30மணி முதல்

இடம் : நேத்தாஜி மண்டபம், MIC HQ கோலாலம்பூர்

ஓர் இலக்கிய விழாவாக மலரும் இந்த நூல் வெளியீட்டின் சிறப்பு அங்கமாக, மூத்தோர், இளையோர் கவியரங்கமும், இலக்கிய உரையும், விருதுவிழாவும் இடம்பெற விருக்கின்றன. புதுக்கவிதைக்கு அங்கீகாரம் வழங்கும் இந்த இலக்கிய விழாவில் இணைந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 

Leave a Reply