மலேசிய இந்திய நீதீ காங்கிரஸ் கட்சி இந்தியர்களுக்காக பாடுபடும் – சண்முகம்

1 Minute News, Malaysia, News, Politics

 189 total views,  1 views today

செய்தி: லோகேஸ்வரி

ஷா ஆலம், ஜூலை 31-

மலேசிய அரசியல் வரலாற்றில் இந்தியர்களுக்காக புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மலேசிய இந்திய நீதி காங்கிரஸ் கட்சி (KKIM) இந்தியர்களின் குரலாக எதிரொலிக்கும் என்று அதன் தேசியத் தலைவர் சண்முகம் ராமையா தெரிவித்தார்.

இந்நாட்டிலுள்ள இந்தியர்களுக்கென்று பல இந்தியக் கட்சிகள் உள்ள நிலையில் மேலும் ஓர் அரசியல் கட்சி இந்திய சமுதாயத்திற்கு பலமாகவே கருதப்பட வேண்டும்.

மஇகா உட்பட பல அரசியல் கட்சிகள் இருந்தாலும் அவற்றுக்கு நாம் எதிரியாகவோ எதிர்ப்பாகவோ இருக்க போவதில்லை. அவர்களுடைய கொள்கைக்கு ஏற்ப அவர்கள் செயல்படும் சூழலில் நாம் நமது கொள்கைக்கு ஏற்ப செயல்படவிருக்கிறோம்.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும்போது அதனால் இந்திய சமுதாயத்திற்கே பல்வேறான அனுகூலங்கள் கிடைக்கப் பெறும்.

அதோடு, வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் களம் காணும் என்றும் அவர் சொன்னார்.

நாடு தழுவிய நிலையில் 20,000க்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்டுள்ள இக்கட்சி, வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் களமிறங்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதற்கேற்ப சிலாங்கூரில் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளையும் பேராக்கில் ஒரு சட்டமன்றத் தொகுதியையும் அடையாளம் காணப்பட்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நேற்று முன்தினம் ஷா ஆலம், ஜினோ ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சண்முகம் இதனை கூறினார்.

2019இல் தொடங்கப்பட்ட இக்கட்சி கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு, சமயம், சமூகநலன் ஆகிய கூறுகளை உள்ளடக்கி பாடுபடும் என்றும்
நடப்பு அரசாங்கத்திற்கு முழு ஆதரவு வழங்கும் வேளையில் மிகப் பெரிய கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தல் களத்தை சந்திக்கவிருப்பதாகவும் அதற்கேற்ற பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

அதனடிப்படையில் பிற கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் கேகேஐஎம்-இன் ஆதரவு படையினர் என 400க்கும் மேற்பட்டோர் இக்கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளனர் என்று அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் கட்சியின் உதவித் தலைவர் மேத்தியூ, தேசிய மகளிர் தலைவி சந்திரா, சிலாங்கூர் மாநில தலைவர் சரவணன், கூட்டரசுப் பிரதேச மகளிர் தலைவி நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply