மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க.கணேசன்- நீதிமன்றம் உத்தரவு

Malaysia, News, Politics

 86 total views,  1 views today

ரா.தங்கமணி – நக்கீரன்

பெட்டாலிங் ஜெயா-

மலேசிய இந்து சங்கத்தின் தலைவராக ‘சிவநெறிச் செல்வர்’ தங்க.கணேசன் என்பதை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

இதன்வழி மலேசிய இந்து சங்கத்தில் மக்கள் தீர்ப்பும் தர்மமும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

மலேசிய இந்து சங்கத்தின் புதிய தலைவராக கடந்த ஜூலை 24-ஆம் நாள் நடைபெற்ற 45-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் வெற்றி பெற்றது செல்லும் என்று, இன்று அக்டோபர் 31 நண்பகல் வேளையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் தலைமை குறித்து மலேசிய இந்து சங்கத்தில் பேரளவில் அதிருப்தியும் ஆதங்கமும் நிலவி வந்த நிலையில், அது, சங்கத்தின் அண்மைய ஆண்டுக் கூட்டத்தில் எதிரொலித்தது.

இந்து சங்கத்தில் தலைமை மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்து களமிறங்கிய ‘மாறுவோம்; மாற்றுவோம்’ அணியினர் அபார வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டுக் கூட்ட அரங்கத்திலேயே நடைபெற்ற முதல் மத்தியப் பேரவையில் இந்து சங்கத்தின் புதிய தலைவராக தங்க. கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் விளைவாக, உடனே பதவி விலகுவதாக சங்க உறுப்பினர்களின் முன்னிலையில் அறிவித்த பழைய தலைவர் மண்டபத்தை விட்டும் வெளியேறிய போது, அந்தத் தலைமையின் பரிவாரத்தினரும் உடன் வால்பிடித்துச் சென்றனர்.

ஆனாலும் அடுத்த இரு நாட்களில், ஏதோவொரு சட்ட இடுக்கைப் பயன்படுத்தி, தான்தான் இன்னமும் தலைவர் என்று சொல்லிக் கொண்டு பழைய தலைமை சண்டித்தனம் செய்ததால், இந்த சிக்கல் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால், மலேசிய இந்து சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் சேவை ஆற்றவேண்டிய சமயத்தொண்டர்கள் நீதிமன்றத்திற்கு அலைய நேர்ந்தது.

ஆனாலும், இன்று சரியாக 100-ஆவது நாளில் தர்மமும் ஜனநாயகத் தீர்ப்பும் நீதிமன்றத் தீர்ப்பின்வழி நிலைநாட்டப்பட்டுள்ளது.

‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசனும் அவர்தம் தலைமையிலான நிருவாகக் குழுவினரும் மலேசிய இந்து சங்கத்திற்கு மறுமலர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தட்டும்.

நேற்று சூரசம்ஹாரம் முடிந்து, இன்று கந்த சஷ்டியும் திருமுருக தவக்காலமும் பூர்த்தியாகும் நாளில் மலேசிய இந்து சங்க தலைமையகத்திற்கு நல்ல சூழல் மலர்ந்துள்ளது. வாழ்க மக்கள் தீர்ப்பு; வளர்க இந்து சங்கம்.

Leave a Reply