மலேசிய குடியுரிமை விவகாரத்தில் பாலியல் பாகுபாடு ஏன்- கணபதிராவ்

Malaysia, News

 231 total views,  2 views today

ஷா ஆலம்

மலேசிய குடியுரிமை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வரலாற்று தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் மேல் முறையீடு செய்யக்கூடாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

வெளிநாடுகளில் உள்ள மலேசிய தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மலேசியக் குடியுரிமை பெறுவதற்கு இயல்பாகவே அனுமதி உள்ளது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது பெண்கள் அனைவருக்குமே வழங்கப்பட்டுள்ள நடுநிலை நீதியாகும். சட்டவிதிகளில் பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதியை ஒரு தீர்ப்பின் மூலம் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த ஓர் ஆணுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைக்கு மலேசிய குடியுரிமை பெற அனுமதிக்கும் சட்டம் அதுவே வெளிநாட்டில் வசிக்கும், வெளிநாட்டவரை மணக்கும் ஒரு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு மலேசிய குடியுரிமை வழங்குவதற்கு அனுமதியில்லை என சொல்லும் சட்டம் எவ்வாறு நடுநிலையானதாகும்?

குடியுரிமை வழங்குவதில் உள்ள சட்டப் பிரச்சினைக்கு “PARENT” என்ற ஆங்கில வார்த்தைக்கு “BAPA” என தந்தையை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது தான் முதன்மை பிரச்சினையாகும்.

அதையேதான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “BAPA” என்ற வார்த்தை அம்மாவையும் குறிக்கும் என தெரிவித்துள்ளார்.

சட்டவிதியில் காணப்படும் முரண்பாடான கருத்தால் இன்று எத்தனையோ பேர் தங்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய குடியுரிமையை பெற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

தமது ‘பரிவுமிக்க அரசாங்கம்’ எனும் பொறுப்புடைமையின் கீழ் ‘மைசெல்’ திட்டம் தொடங்கப்பட்டு அதன் மூலம் அடையாள ஆவணங்கள், குடியுரிமை இல்லாமை போன்ற பல பிரச்சினைக்கு தீர்வு கண்டு வருகிறோம்.

“நாடற்றவர்கள்” என்ற நிலையை மாற்றியமைக்க குடியுரிமை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நிலைநாட்டப்பட அத்தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரதமர், சட்டத்துறை தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கணபதிராவ் மேலும் சொன்னார்.

Leave a Reply