மலேசிய ரிங்கிட் மதிப்பு : கவலைப்பட வேண்டாம் என நிதியமைச்சர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா ?

Business, Economy, Malaysia, News

 47 total views,  1 views today

– குமரன் –

கோலாலம்பூர் – 14 செப் 2022

அனைத்துலக நிலையில் மலேசியாவின் எஇங்கிட் மதிப்பு குறைந்து வருகிறது. அது கவலைக்கிடமான நிலையில் இல்லை என நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு ஸஃப்ருல் அஸிஸ் கூறி இருக்கிறார். மேலும், குறுகிய கால – நீண்டகாலப் பொருளாதார நிலையில் மட்டுமே அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இது சில கேள்விகளை தற்பொழுது எழுப்பியுள்ளது.

ஒரு அமெரிக்க டாலருக்கு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு ரிம 4.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இருந்தும் நிலவரம் கவலைக்கிடமாக இல்லை என நிதியமைச்சர் கூறி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 1997 – 1998 ஆம் காலக் கட்டத்தில் ஏற்பட்டப் பொருளாதாரச் சரிவு போல் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து இறங்கு முகத்தைச் சந்தித்து வந்தால் பொருளாதார வளர்ச்சி நிச்சயம் கேள்விக் குறிதான்.

நாட்டின் உண்மையானப் பொருளாதார நிலவரத்தை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அன்றாடத் தேவௌக்கானப் பொருட்களின் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருவதை சராசரி மக்கள் உணரத் தொடங்கி சில காலம் ஆகி விட்டது. ஆனாலும்,  நாட்டின் பணவீக்கம் 4.4%தான் (ஜூ;அஒ 2022) அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

எண்களின் அடிப்படையில் அரசாங்கத்தின் தகவல்கள் சரியாகக் கூட இருக்கலாம். ஆனால், நடப்பு நிலவரம் அப்படியா உள்ளது ? நகர் புற மக்களைத் தாண்டி புறநகர் மக்களும் விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எண்ணெய், முட்டை, கோதுமை போன்ற மக்களீன் அன்றாடத் தேவைக்கானப் பொருட்களீன் விலை இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளன. இது நாட்டின் பணவீக்கம் வெறும் 4.4 விழுக்காடுதான் எனச் சொல்ல முடியுமா ? எற்றுக் கொள்ளும் வகையிலா இருக்கிறது ?

ரிங்கிட்டின் மதிப்பில் தமது கவனத்தைச் செலுத்தாமல் குறுகிய கால – நீண்டகால பொருளாதாரத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் நிதியமைச்சர் கூறி இருக்கிறார்.

இது பல கோணங்களில் கேள்வி எழுப்பி வருகிறது !

1. குறைந்து வரும் ரிங்கிட்டின் மதிப்பு விவகாரத்தைப் புறந்தள்ளி விட்டு குறுகிய கால – நீண்டகால பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவது சரியான முடிவா ?

2. அதிகரித்திருக்கும் பொருட்கள் – சேவைகள் ஆகியவற்றின் விலை, இறக்குமதிச் செலவு, பணவீக்கம் ஆகியவற்றுக்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பு இல்லையா ?

3. அப்படி இல்லை என்றால், வேறு என்ன பொருளாதார அறிவை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் ?

4. மலேசியாவின் வணிகத்தில் 80 விழுக்காடும் மலேசியாவின் கடனும் அமெரிக்க டாலரைத்தான் பயன்படுத்துகிறது என்பது நிதியமைச்சருக்குத் தெரியும்தானே ?

5. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து மலேசிய நிங்கிட்டின் மதிப்பு குறைந்தால் அது நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை எற்படுத்தாதா ?

6. இதன் அடிப்படையில் பார்த்தால், வெளிநாட்டில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் அதன் தாக்கம் இருக்காதா ?

நாம் ரிங்கிட்டில் வருமானம் பெற்று டாலரில் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையில் பார்த்தால், பணவீக்கத்தை இறக்குமதி செய்கின்றோம் என்பதே உண்மை. மேலும், நம்முடைய வெளிநாட்டுச் சேமிப்பும் டாலரில்தான் இருக்கின்றது. எந்த வகையிலும் நம்மால் டாலரை புறந்தள்ளவ்வே முடியாது.

ஒரு வேளை சீனா, இரஷ்யா, இந்தியா, ஈரான் ஆகிய நாடுகளைப் போல் டாலர் அல்லாத de dollarization கொள்கையைப் பயன்படுத்த எத்தனித்தாலும், டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்க வெகு தூரம் இன்னும் நாம் பயணிக்க வேண்டி இருக்கிறது.

மலேசியா – ஆசிய நாடுகளின் வெளிநாட்டுச் சேமிப்பு – ஓர் ஒப்பீடு

  • சீனா : 3,576.63 பில்லியன் அமெரிக்க டாலர்
  • இந்தியா : 633.83 பில்லியன் அமெரிக்க டாலர்
  • ஜப்பான் : 1,430.53 பில்லியன் அமெரிக்க டாலர்
  • தென் கொரியா : 461.77 பில்லியன் அமெரிக்க டாலர்
  • சிங்கப்பூர் : 426.63 பில்லியன் அமெரிக்க டாலர்
  • மலேசியா : 108 பில்லியன் அமெரிக்க டாலர்

சேமிப்பு இவ்வாறு இருக்க, மலேசியாவின் கடன் நிலை வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது.

மலேசியாவின் கடன் ரிம 1 திரில்லியன். அரசாங்க சார்புடைய நிறுவனங்களின் உத்திரவாதக் கடன் ரிம 200 பில்லியன். தனியார் கடன் மேலும் ரிம 200 பில்லியன். ஆக மொத்தம் ரிம 1.4 திரில்லியன்.

திரில்லியனுக்கும் மேலான கடன். இவ்வாறானச் சூழலில் என்ன எதிர்ப்பார்க்க முடியும் ? எந்த முதலீட்டாளர் இங்கு வந்து பணத்தைக் கொட்டுவர் ? ரிங்கிட்டின் மதிப்பு குறைந்து வருவதை அப்படியே விட்டு விட முடியுமா ?

நிலை ஒருவாறாக இருக்க குழப்பும் அறிக்கை அமைச்சருக்கு அவசியம்தானா ?

Leave a Reply