
மாவீரர் நாளில் Tugu Negara – தேசிய நினைவகத்தைப் பற்றி அறிந்து கொள்வோம் !
263 total views, 1 views today
கோலாலம்பூர் – 31 ஜூலை 2022
மலேசியாவின் தலைநகரில் Tugu Negara என்றழைக்கப்படும் தேசிய நினைவகத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால், அதற்குப் பின்னால் புதைந்திருக்கும் சில தகவல்களை நாம் அறிவோமா ? அதன் வரலாறு என்ன ?
கோலாலம்பூரில் இருக்கும் தாமான் தாசேக் பெர்டானாவில் அமைந்துள்ளது இந்த நினைவகம். மக்களின் பார்வைக்கு திறந்த வெளியில் அஃது அங்கு நிறுவப்பட்டுள்ளது.
ஆயுதப் படை வீரர்கள் சிலர் கம்பீரமாகக் காட்சி தருவதுபோல் அந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கும். மலேசியக் கொடி ஜாலோர் கெமிலாங்கை ஏந்தியபடியும் அதில் ஒரு வீரர் காட்சி தருவார். சிலர் இறந்த நிலையில் அந்தச் சிலையில் அடியில் இருப்பர். இதற்கெல்லாம் என்ன பொருள் ?

இந்த நினைவகம் 1963 ஆம் ஆண்டு நிறுவப்படத் தொடங்கி 1966 ஆம் ஆண்டு பிப்பரவரி 8 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது.
முதலாம் உலகப் போர் (1914), இரண்டாம் உலகப் போர் (1935-1942), 1948 முதல் 1960 வரையில் நீடித்த ஊரடங்கு – அவசர காலத்தில் உயிர் நீத்த 11,000க்கும் மேற்பட்ட மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த நினைவகம் உருவாக்கப்பட்டது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நினைவுச் சின்னம் 15 மீட்டர் உயத்தில் வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. இதனை ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் டி வெல்டன் (Felix de Weldon) உருவாக்கினார். உலகிலேயே அதிகம் உயரம் கொண்ட குழு நிலையிலான சிலை இது எனும் பெருமையைக் கொண்டுள்ளது.
எழுவர் கொண்ட இந்தச் சிலை போற்களத்தில் தலைமைத்துவம், ஒற்றுமை, எதற்கும் தயாராக இருக்கும் நிலை, வீரம், துணிச்சல், தியாகம், ஆற்றல் போன்ற ஏழு முக்கியக் கூறுகளை உட்படுத்தியது.
கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் நாள், கம்யூனிஸ்ட் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
