
மித்ரா நிதி முறைகேடு; ஹலிமா நடவடிக்கை என்ன?- வேதமூர்த்தி
279 total views, 2 views today
கோலாலம்பூர்,அக்.16-
2018ஆம் ஆண்டின் ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தொடர்பில் மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பதற்கான விளக்கத்தை மலேசிய இந்தியர்களுக்கு ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமா கூற கடமைப்பட்டிருக்கிறார் என மித்ராவுக்கு பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறியுள்ளார்.
தான் முன்பு குறிப்பிட்டது போல, முந்தைய செடிக்-கிற்கு வழங்கப்பட்ட நிதி பெருமளவில் தவறாக கையாளப்பட்டதைத் தொடர்ந்து, ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகம் பல்வேறு கண்டனங்களையும் பரிந்துரைகளையும் தெரிவித்து இருந்ததை தான் கணக்கில் எடுத்துக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மஇகாவை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ஒரு துணை அமைச்சருக்கு கிட்டத்தட்ட 40 மில்லியன் வழங்கப்பட்டதற்கான சான்றுகள் இருந்தன.
இந்தக் குறைபாடுகள் அனைத்தையும் தானும், தனியார் மற்றும் அரசு துறைகளைச் சார்ந்த தொழில் வல்லுநர்களை கொண்ட புதிய மித்ரா நிர்வாக குழுவும் நிவர்த்தி செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
மானியத் தொகை குறித்து, வெளிப்படையான நிதி மேலாண்மை அமைப்பு மூலம் பொதுமக்களுக்கு காட்டப்பட்டது, இதனால் இந்திய சமூகத்திற்கான திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கான பொது ஆய்வாகவும் மேம்படுத்த வழிகள் காணவும் முடியும். இது ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம், எம்ஏசிசி ஆகிய இரண்டாலும் ஆதரிக்கப்பட்டது.
இந்திய சமூகத்திற்கான நிதியை துஷ்பிரயோகம் செய்ய பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியவர்களின் மீது மேல்நடவடிக்கை எடுக்க ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தோடு தான் தொடர்பில் இருந்ததாக வேதமூர்த்தி மேலும் கூறினார்.
குறிப்பாக எவ்வித திட்டங்களையும் மேற்கொள்ளாமல் நிதி செலவிடப்பட்டதற்கான தெளிவான சான்றுகள் அறிக்கையில் காணப்பட்டன. இந்திய சமூகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்ய, தணிக்கையாளர் அலுவலகத்தோடு இணைந்து எத்தகைய மேல்நடவடிக்கை எடுத்தார் என்பதை அமைச்சர் ஹலிமா இப்போது பகிரங்கமாக சொல்ல வேண்டும்.
இந்திய சமூகத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட வெளிப்படையான நிதி மேலாண்மை அமைப்பை அகற்றியதற்கான காரணத்தை ஹலிமா விளக்க வேண்டும். இந்த அமைப்பை அவர் வேண்டுமென்றே தகர்த்தெறிந்தாரா என்பது இந்திய சமூகத்தின் மத்தியில் ஒரு கேள்வியாகவே உள்ளது என மலேசிய முன்னேற்ற கட்சியின் தேசிய தலைவருமான வேதமூர்த்தி மேலும் தெரிவித்தார்.
இன்னும் பல செய்திகளுக்கு…