மின்னல் பண்பலை தலைவர் கிருசுணமூர்த்தி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் ஆர்.டி.எம்மில் இயங்குகிறாரா ? – நாக.பஞ்சு கண்டனம்

Malaysia, News

 330 total views,  1 views today

கோலாலம்பூர் – 28 செப் 2022

மின்னல் பண்பலையின் தலைவர் கிருசுனமூர்த்தி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடைப்படையில் இயங்குகிறாரா எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு.

அவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில்:

“1929, 1954 ஆம் ஆண்டு பெரியாரின் மலாயா வருகைக்குப் பிறகு மலேசியாவில் திராவிடர் இயக்கங்கள் பரவலாகத் தோன்றின. தந்தை பெரியாரின் பகுத்தறிவு. சுயமரியாதை, பெண்ணியச் சிந்தனை, சாதியக் கொடுமை ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என பல சிந்தனைகளைத் தாங்கி நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினரும், பெரியாரியல் தோழர்களும், பொதுமக்களும் இயங்கி வருகிறார்கள்.”

“மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம், அரசு சங்க பதிவிலாகாவில் முறையாகப் பதிவு பெற்று, அரசு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கி வரும் ஒரு சமூக இயக்கமாகும்.”

“மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழக ஏற்பாட்டில், கடந்த 25/09/2022இல், நடைபெற்ற 144 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – சமூகநீதி நாளினை முன்னிட்டு, தமிழ்நாட்டு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் – அவரோடு திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர், “பெரியார் பெருந்தொண்டர்” சிற்பி’ அர, செல்வராசு, மற்றொரு துணைப் பொதுச்செயலாளர், “பெரியார் பெருந்தொண்டர்” ஆ. சிங்கராயர் ஆகியோர் மலேசியாவிற்கு வருகை தந்தனர்.”

இதரச் செய்திகள் :

“பொதுவாகவே, தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவிற்கு வருகை புரியும் பேச்சாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் இன்னும் பலர் ஆர்.டி.எம். மின்னல் பண்பலையில் நேர்காணல் எடுக்கப்படுவது வழக்கமாகவே இருந்து வந்துள்ளது.”

“அந்தவகையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஐயா சிற்பி’ அர. செல்வராசு அவர்களின் வருகையின் போது, மின்னல் பண்பலையில் அவரது நேர்க்காணல் பதிவிடப்பட்டு, 20 நாள்கள் தொடராக “அமுதே தமிழே” எனும் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்பப்பட்டது நாடே அறியும். அதுமட்டுமல்லாமல், அதே பதிவு கொரோனா – கோவிட் 19 பெருந்தொற்றின் காலங்களில் மீண்டும் மறு ஒலியேறியது பாராட்டக்குரிய செய்தியாகும்.”

அதேபோன்று, கடந்த 15.01.2018இல், பேராசிரியர், சுப.வீரபாண்டியன் அவர்களின் நேர்காணலும் மின்னல் பண்பலையில் முன்பு ஒலிபரப்பப்பட்டுள்ளது.

இம்முறையும், கடந்த 24.9.2022 ஆம் நாள் அவர்கள் மலேசியாவுக்கு குறுகியக் கால வருகையைத் தொடர்ந்து மின்னல் பண்பலையில் நேர்க்காணலில் இடம்பெற வாய்ப்புள்ளதா என இன்றைய மின்னல் பண்பலையின் தலைவரான திரு. கிருசுணமூர்த்தி அவர்களை மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தேசியத் தலைவர் நாக. பஞ்சு அலைப்பேசி வழி தொடர்பு கொண்டு கேட்டபோது, முதல் அழைப்பில் திரு. கிருசுணமூர்த்தி அவர்கள், தனக்கு பெரியார், சுப.வீரபாண்டியன் போன்றோரின் கருத்துகளோடு உடன்பாடு இல்லை என்று சாக்குபோக்கு சொல்லி, மறுத்து நேர்க்காணலைத் தட்டிக்கழித்து விட்டார்.

அதை தொடர்ந்து புலனத்தில் “இஸ்லாம் போன்ற வேறு மதங்களைப் பழிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டா?”, “ஹஜ்ஜுக்குப் போகும் இஸ்லாமியர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? அதைப் பற்றி பேசுவீர்களா?” என்று இந்துத்துவா மத தீவிரவாதி போன்று, மத வெறுப்பினையும் கக்கியுள்ளார்.

மீண்டும் அவரை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், அணுகியப் போது, சனிக்கிழமை நேர்க்காணல் செய்ய நேரம் இல்லை என்று மறுத்து கூறினார் மின்னல் பண்பலை தலைவர் திரு.கிருசுணமூர்த்தி.

சரி, தொடர்ந்து வரும் வாரத்தில் ஏதாவதொரு நாளில் பதிவு செய்ய வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, “பார்த்து சொல்கிறேன்” என்று மீண்டும் தட்டிக்கழித்தார்.

பொதுவாக தமிழகப் பேச்சாளர்களோ, அல்லது தமிழ்நாட்டு அரசு பிரதிநிதிகளோ வரும்போது அவர்களின் நேர்க்காணல் முதலில் பதிவுசெய்யப்பட்டு, பிறகு ஒலிப்பரப்படும். அந்த வாய்ப்புக் கூட தர வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார் திரு. கிருசுணமூர்த்தி.

“ஆர்.டி.எம்.மில் இதற்கு முன்பிருந்த தலைவர்கள் யாரும் இதுபோன்று இனவாதமோ மதவாதவோ பேசியது இல்லை. ஆனால், திரு. கிருசுணமூர்த்தி மதவாதத்தை வெளிப்படையாகவே பேசுகிறார். அது நமது ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்.”

அவரின் தீவிரவாதக் கொள்கையை ஒரு பொது ஊடகத்தில் நின்று கொண்டு வெளிப்படையாக செய்வது கடுங்கண்டனத்துக்கு உரியது! இதனை தகவல் தொழில்நுட்ப அமைச்சின் பார்வைக்கும், மனிதவள அமைச்சர் மாண்புமிகு, டத்தோசிறீ. மு. சரவணன் அவர்களின் பார்வைக்கும் மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் அனுப்பிவைக்குமென அதன் தலைவர் நாக. பஞ்சு குறிப்பிட்டார்.

Leave a Reply