மைகார்ட் தொலைந்து போனதாக 1,546 பொய் புகார்கள்

Malaysia, News

 209 total views,  3 views today

கோலாலம்பூர்-

கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அடையாளக் கார்டு காணாமல் போனதாக செய்யப்பட்ட பொய்ப் புகார்களின் எண்ணிக்கை 1,546 ஆகும் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டில் 806 புகார்களும் 2020 இல் 368 புகார்களும் செய்யப்பட்ட வேளையில் எஞ்சிய புகார்கள் 2019 ஆம் ஆண்டில் பதிவானதாக உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் முகமது சைட் கூறினார்.

1990 ஆண்டு தேசிய பதிவுத் துறை விதிகளின் படி காணாமல் போகும் அடையாளக் கார்டுகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அடையாளக் கார்டு தொலைந்ததற்காக அபராதம் விதிக்கப்படுவதில் முறைகேடுகள் நிகழ்வதை தடுப்பது மற்றும் மாற்று அடையாளக் கார்டுகளை வழங்கும் நடவடிக்கையை ஆக்ககரமான முறையில் மேற்கொள்வது ஆகிய நடவடிக்கைகளை இதன் மூலம் மேற்கொள்ள இயலும் என்று அவர் சொன்னார்.

மேலவையில் இன்று செனட்டர் டி.மோகன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அடையாளக் கார்டுகளை உண்மையில் தொலைத்தவர்கள் மற்றும் அபராதத் தொகையை செலுத்துவதை தவிர்ப்பதற்காக பொய்ப்புகார் செய்வோர் தொடர்பான தரவுகள் தொடர்பில் டத்தோ டி.மோகன் மக்களவையில் விளக்கம் கோரியிருந்தார்.

Leave a Reply