வட்டி முதலைகளால் இன்னலா? உதவிக்கரம் நீட்டுகிறது சிலாங்கூர் சாஸ்தா அமைப்பு

Malaysia, News, Politics

 259 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

நிதிச்சுமை எதிர்நோக்குபவர்கள் தங்களின் பணத் தேவைகளுக்காக வட்டி முதலைகளை நாட வேண்டாம். வட்டி முதலைகளால் பல குடும்பங்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்று சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பின் (சாஸ்தா) தோற்றுனர் ராம்ஜி தெரிவித்தார்.

இன்றைய பொருளாதாரச் சூழலில் இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த பலர் நிதிச்சுமையை எதிர்நோக்கி வருகின்றனர். அதற்கு தீர்வு காண வட்டி முதலைகளை நாடும் தரப்பினர் பின்னாளில் அச்சுறுத்தலுக்கு ஆளாவதோடு சில சமயங்களில் தற்கொலையிலும் ஈடுபடுகின்றனர்.

வட்டி முதலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதே இவ்வமைப்பின் முதன்மை நோக்கம் என்று கூறிய ராம்ஜி, இதுவரை 5,000 பேரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக கூறினார்.

வட்டி முதலைகளால் பிரச்சினைகளுக்கு ஆளானவருக்கு பணவுதவி வழங்கி அவர்களுக்கு நிம்மதியான வாழ்வை உறுதி செய்யும் சாஸ்தா அமைப்பு, தற்போது மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்துடன் இணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி வட்டி முதலையிடம் கடம் பெற்றவர்களுக்கு பிற அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவங்களிடம் பேசி குறைந்த வட்டியில் கடனை பெற்றுக் கொடுக்கிறோம். வட்டி கடன் பிரச்சினை தீர்ந்த பின்னர் நிதி நிறுவன ங்களிடம் பெற்ற பணத்தை தவணை முறையில் அவர்கள் திரும்பச் செலுத்தலாம்.

ஆனால் கடன் பெற்றவர்கள் மரணித்தாலோ உடல் செயலிழப்பை எதிர்கொண்டாலோ ஜாமீன் உத்தரவு வழங்குபவர் கடனை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படலாம்.  உத்தரவாதம் வழங்கினால் பின்னாளில் நாம் சிக்கலிம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் பலர் முன்வருவதில்லை.

இதற்கு தீர்வளிக்கும் வகையில் கடன் பெறுபவருக்கு காப்புறுதி திட்டம் வழங்கப்படுகிறது. கடனாளிக்கு ஏஐஏ  காப்புறுதி திட்டம் வழங்கும் நிலையில் அவருக்கு ஏதாவது நேர்ந்தால் வாரிசாக நியமிக்கப்படும் உத்தரவு வழங்கியவருக்கு நிதி சென்றடையும்போது பெற்ற கடனை அவர் திரும்பச் செலுத்தலாம்.

குறைந்தது 25,000 வெள்ளி வரையிலும் காப்புறுதி பாதுகாப்பு வழங்கும் நிலையில் உத்தரவாதம் அளிப்பவரும் பின்னாளில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை. இது உத்தரவாதம் அளிப்பவருக்கு பாதுகாப்பானதாக அமையும் என்று அவர் சொன்னார்.

வட்டிப் பிரச்சினையில் சிக்கி தவிப்பவர்கள் தன்னை 03-77325503 / 03-7732 5502 என்ற என்ணில் அழைக்கலாம் அல்லது தம்மை நேரில் சந்திக்கலாம் என்று ராம்ஜி தெரிவித்தார்.

Leave a Reply