
வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கம் கிடையாது- கணபதிராவ்
421 total views, 2 views today
ரா.தங்கமணி
ஷா ஆலம்-
தீபாவளி கலை நிகழ்ச்சிகளை நடத்தி இந்திய வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கம் எதுவும் கிடையாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.
இந்தியர்கள் பெரும்பான்மையாக உள்ள கிள்ளானில் மாநில அரசின் தீபாவளி நிகழ்ச்சியை நடத்தினால் அது நமது கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்க செய்யும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே தம்மிடம் இருந்தது. அதை விடுத்து சாலை வழிகளை மறைத்து வியாபாரிகளுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
சிலாங்கூர் மாநில பட்டத்து இளவரசர் தெங்கு அமிர் ஷா, மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி ஆகியோர் வருகை புரியவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சில சாலைகள் மூடப்பட்டன.
இது கூட புரிந்து கொள்ளாமல் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே இவ்விவகாரத்தை சில தரப்பினர் அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்தாண்டுகளில் இவ்விழாவை ஷா ஆலமிலும் சிப்பாங்கிலும் நடத்தியபோது கிள்ளானில் நடத்தினால் மக்கள் கூட்டம் இங்கு திரளுமே, இங்குள்ள வணிகர்களுக்கு கூடுதல் வியாபாரம் கிடைக்குமே என்று கோரிக்கைகள் விடப்படன.
ஆனால் இப்போது கிள்ளானில் தீபாவளி நிகழ்ச்சியை நட த்தினால் இந்திய வணிகர்களின் வயிற்றில் அடிக்கிறேன் என கூப்பாடு போடுவது ஏன்?
கணபதிராவ் அங்கு நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றால் அங்கு வேறு யாராவது நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம். அது அங்குள்ளவர்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்தாது. ஆனால் கணபதிராவ் நிகழ்ச்சியை நடத்தினால் மட்டும் அது சர்ச்சையாவதற்கு அது அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆயினும் நேற்று டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு சாலை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.
விளம்பரம்
