வளர்தமிழ் விழா மாணவர்களின் தமிழ் ஆளுமையை மெய்பிக்கும் களம் – தலைமையாசிரியர் மன்றத் தலைவர் பெருமிதம்!

Education, Indian Student, Malaysia, Malaysia, News, Tamil Schools

 137 total views,  2 views today

(சிவாலெனின்)

தாப்பா – 26 ஜூலை 2022

தமிழ்ப் பள்ளி மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம் தொடங்கி தேசிய நிலையில் நடத்தப்பட்டு வரும் வளர்தமிழ் விழா தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழியின் ஆளுமையை மெய்ப்பிக்கும் களமாக அமைந்திருப்பதாக பத்தாங் பாடாங் மாவட்டத் தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் தமிழ்த்திரு கா.தியாரன் பெருமிதமாக குறிப்பிட்டார்.

வளர் தமிழ் விழா ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் வெறும் ஆண்டு நிகழ்வல்ல.மாறாக,அது மாணவர்களின் தமிழ் ஆளுமையையும் புலமையையும் வெளிப்படுத்தும் மாபெரும் இலக்கிய களம் என்று மாவட்ட நிலையிலான தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான வளர்தமிழ் விழாவில் தனது தலைமையுரையின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்ப்பள்ளியில் தாய்மொழிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதுசார்ந்த வாழ்வியல் நெறியும் நமக்கு வேறு எங்கும் கற்பிக்கப்படாது எனவும் கூறிய தியாரன் தமிழ்ப்பள்ளியே நமது முதன்மை தேர்வாக இருக்கவும் வேண்டும் என்றார். தாயின் கருவறை உலகத்திற்கு நம்மை கொடுத்தது,தமிழ்ப்பள்ளியின் வகுப்பறை உலகத்தையே நமக்கு கொடுத்தது எனவும் அவர் தமிழ்ப்பள்ளிகளின் பெருமையையும் இந்நிகழ்வில் எடுத்துரைத்தார்.

இம்மாவட்டத்தை சார்ந்த சுமார் 10 தமிழ்ப்பள்ளிகளை சார்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் கவிதை ஒப்புவித்தல், கட்டுரை எழுதுதல், புதிர்போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்து தங்களின் திறனையும் தமிழாற்றலையும் வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்ற வளர்தமிழ் விழா இம்முறை தாப்பா தமிழ்ப்பள்ளியில் நடந்தேறிய வேளையில் ஒட்டுமொத்த வெற்றியாளராக பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி வாகை சூடிய நிலையில் இரண்டாம் வெற்றியாளராக பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் அதனை தொடர்ந்து மூன்றாம் நிலை வெற்றியாளராக தாப்பா தமிழ்ப்பள்ளியும் வெற்றி பெற்றன.

இப்போட்டியில் வெற்றிகளை பதிவு செய்த முதன்மை நிலை வெற்றியாளர்கள் மாநில ரீதியிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை நடைபெற்ற மாவட்ட நிலையிலான வளர்தமிழ் விழாவிற்கு ஆதரவுக் கொடுத்த தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவர்களை பயிற்றுவிற்ற ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி இலாகாவினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,பொற்றோர்கள் உட்பட அனைத்து தரப்பிற்கு தலமையாசிரியர் தியாரன் தனது நன்றியையும் பதிவு செய்தும் கொண்டார்.

Leave a Reply