
“வாகனத்தை வாங்க உரிமம் கேட்கிறார்கள். உரிமம் பெற வாகனத்தைக் கேட்கிறார்கள்.” – மாற்றுத்திறனாளி இராதாகிருஷ்ணன்
214 total views, 1 views today
குமரன்
கோலாலம்பூர் – 27 ஆகஸ்டு 2022
என்ன ? ஒற்றைக் கையுடன் உணவு விநியோகிக்கிறாரா ? இராதாகிருஷ்ணனைப் பார்த்தவுடன் மனதில் தோன்றும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். தமது 6வது வயதில் தண்டவாளத்தில் விழுந்த இராதாகிருஷ்ணனின் வலது கையை தொடர்வண்டி ஏறி துண்டித்தது.
இருந்தாலும், தற்போது 34 வயதாகும் அவர் தம்மை மற்றவர்களிடத்திலிருந்து வேறுபட்டவராக நினைக்கவில்லை என்கிறார். சொந்தக்காலில் நின்று தமது வாழ்க்கையைத் தாமே பார்த்துக் கொள்கிறார் அவர்.
“மற்றவரின் அனுதாபத்தைப் பெற விருப்பமில்லை. நானும் மற்றவர்களைப் போல் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும். எனது வாழ்க்கையை நான்தான் பார்க்க வேண்டும்.”
தாம் சிரமத்தில் இருப்பதாக பொது மக்கள் நினைப்பதாகத் தெரிவிக்கும் இராதாக்கிருஷ்ணன், உண்மையில் தாம் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன் என்றார். இந்த வேலையில் கட்டாயப்படுத்தும் வகையில் ஏதும் இல்லை எனக் குறிப்பிடும் அவர் தாம் நினைப்பதை வாங்கி தமக்குப் பிடித்தது போல் வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்கூட்டர் பழுதானதால் மூன்று நாட்கள் கால்நடை
கோலாலம்பூரைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் நடந்து சென்று உணவு விநியோகிக்கும் அவரது படம் சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்தது. இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த இவரின் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் பலரால் பாராட்டப்பட்டது.
தம்மைப் பற்றி இணையத்தில் தகவல் இவ்வளவு வேகமாகப் பரவும் எனத் தாம் நினைக்கவில்லை எனவும் தமது ஸ்கூட்டர் பழுது ஆனதால் சரி செய்யப்படும் வரை அந்த மூன்று நாட்கள் தாம் நடந்தே உணவு விநியோகித்ததாகக் கூறினார்.
வேலைக்கு வந்து விட்டோம். ஆக, வேலை செய்தே ஆக வேண்டும். எனவே நடந்தேன். இந்த பணியில், இன்று வேலை செய்தால்தான் நாளை ஊதியம் கிடைக்கும். எனவே, அன்றாடக் காட்சிப் பிழைப்பானதால் வேலைக்கு நடந்தே சென்றேன்.
ரைடர் நண்பர்கள் மின் – ஸ்கூட்டரை வாங்கிக் கொடுத்தனர்
ஓராண்டுக்கும் மேலாக உணவு விநியோகிப்பாளராக பணி புரிந்து வந்த இராதாக்கிருஷ்ணன், இப்பணியின் தொடக்கக் காலத்தில் மிதிவண்டியில் சென்று உணவு விநியோகித்து வந்தார்.
பின்னர், சக உணவு விநியோகிப்பாளர்களின் உதவியால், அவர்கள் பணம் சேகரித்து 3 சக்கர மின்ஸ்கூட்டர் ஒன்றை வாங்கித் தந்துள்ளனர். இதனால், அவரது நடமாட்டக் மேலும் எளிதானது. பின்னர், மேலும் பணம் சேகரித்து இன்னொரு மின்ஸ்கூட்டரையும் இராதாக்கிருஷ்ணன் வாங்கியுள்ளார். மின்ஸ்கூட்டருக்கு மின்னூட்டம் செய்யப்படும் நேரம் அதிகமாக இருப்பதால் இரண்டு மின்ஸ்கூட்டர்கள் தற்போது வசதியாக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.
சொந்த வாகனம் இல்லாததால் செயற்கைக் கரமும் உரிமமும் நிராகரிக்கப்பட்டன
கடின உழைப்பால் இவ்வளவு முன்னேற்றங்களையும் இராதாக்கிருஷ்ணன் பதிவு செய்திருந்தாலும் சமூகத்தின் பார்வை பலவாறாக இருக்கின்றது.
தமது 21வது வயதில் இருந்து சமூகநல மேம்பாட்டு இலாகாவிடம் தாம் செயற்கைக் கரம் பொருத்த விண்ணப்பத்தும் அது நிராகரிக்கப்பட்டதாக இராதாக்கிருஷ்ணன் சொன்னார்.

“உங்களுக்கு ஒரு கைதானா ?” என சில சிறார்கள் தம்மைப் பார்த்து வினவும்போது, தமக்கு வருத்தமாக இருக்கும் எனப் பகிர்ந்த அவர், தம்மை முழுமையாக கன்ணாடியில் பார்ப்பதில்லை எனவும் தலைமுடி சீவ மட்டும் கண்ணாடியைப் பார்ப்பதாகவும் சோகம் கலந்து தெரிவித்தார்.
தம்மால் வாகனத்தைச் செலுத்த முடியும் என மருத்துவர் சான்றிதழ் இருந்தாலும் மாற்றியமைக்கப்பட்ட சொந்த வாகனம் இல்லாதக் காரணத்தால் உரிமமும் பெற முடியவில்லை என்றார் அவர்.
“வாகனத்தை வாங்க உரிமம் கேட்கிறார்கள்.
உரிமம் பெற வாகனத்தைக் கேட்கிறார்கள்.”
என்று கூறும் அவரால் L ஓட்டுநர் உரிமம் மட்டுமே பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
எனவே, சாலைப் போக்குவரத்துத் துறை இராதாக்கிருஷ்ணன் போல் உள்ள பல மாற்றுத் திறனாளிகள் குறித்தும் எதிர்கொண்டிருக்கும் சிக்கல் குறித்தும் தீர்வு பெற நடவடிக்கை எடுக்கும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக மேலும் கூறினார்.