வெளிநாட்டு கழிவுகளை கொட்டும் நாடல்ல மலேசியா- சூழலியலாளர்கள் கவலை

Malaysia, News

 217 total views,  1 views today


டி ஆர் ராஜா


ஜார்ஜ்டவுன்-
வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது நெகிழி கழிவுகளை, தங்கள் சொந்த நாட்டிலே கொட்டாமல் வளர்ந்துவரும் மலேசியா போன்ற நாடுகளில் கொட்ட ஆரம்பித்து விடுவது மிகுந்த கவலையை தருகின்றது என மலேசியாவின் முன்னணி சூழலியல் அறிஞர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மலேசியா அவர்களின் குப்பைகளை சேகரிக்கும் நாடு அல்ல என்பதை அவர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
இந்த எதிர்ப்பில் பினாங்கு மாநில அரசாங்கம் இணைந்து கொண்டதை அவர்கள் பாராட்டினார்கள்.

ஊழலை எதிர்த்து போராடும் மையம் மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் இது தெரிவிக்கப்பட்டதாக ஊழலை எதிர்த்து போராடும் மையத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தியா கேப்ரியல் கூறினார்.

கெடா மற்றும் பினாங்கு மாநிலத்தில் சட்டவிரோதமான கழிவு கொட்டும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக சிந்தியா தெரிவித்தார். இந்த பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களின் நெகிழி கழிவுகளை மலேசிவிற்க்கு அனுப்பி வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இயற்கை சூழலியலாளர் மகேஸ்வரி சங்கரலிங்கம் தெரிவித்தார்.

இந்த நெகிழி கழிவுகள் மிகுந்த ஆபத்தானது என குறிப்பிட்ட அவர், இதற்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளருமான மகேஸ்வரி தெரிவித்தார்.

நெகிழி கழிவுகள் மலேசியாவிற்க்கு கொண்டுவரப்படுவதை நிறுத்த வேண்டும் என பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ புன் போ தெரிவித்தார்.

பினாங்கு மாநில அரசாங்கம் தனது துறைமுகத்தில் இது போன்ற நெகிழி கழிவுகள் கொண்டுவரப்படும் கொள்கலன்களுக்கு தடை விதித்திருப்பதாக அவர் கூறினார். மற்ற துறைமுகங்களுக்கும் இக்குப்பைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த பிரச்சனையை அவசரமாக தீர்க்க வேண்டும் என திரு பீ கேட்டுக்கொண்டார். கழிவு இறக்குமதி அனுமதிகளை அங்கீகரிப்பதில் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிவற்றிக்கிடையே ஒரு புரிந்துணர்வு வேண்டும் என அவர் ஆலோசனை தெரிவித்தார்.

மலேசியாவில் பிற நாடுகளின் கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் பூவுலகின் நண்பர்கள் இயக்க தலைவர் மீனாட்சி ராமன் தெரிவித்தார்.

சர்வதேச கழிவு வர்த்தகத்தில் இருந்து வரும் பிரச்சனைகளை இறக்குமதி செய்யும் நாடுகளால் மட்டும் தீர்க்க முடியாது என கூறிய மீனாட்சி, வளர்ச்சி அடைந்த தங்களின் சொந்த கழிவுகளை அகற்ற பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

கழிவு வர்த்தகம் நிறுத்தப்பட வேண்டும். இதனால் ஒரு தூய்மையான சூழ்நிலை உருவாக்க முடியும் என்றார் மீனாட்சி.

Leave a Reply