வெ.2.80ஐ சிக்கனப்படுத்துவதுதான் அரசின் சாதனையா?

Malaysia, News

 162 total views,  1 views today

ரா.தங்கமணி

கோலாலம்பூர், நவ.9-

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தப்பட்டு வந்த புரோட்டோன் பெர்டானாவுக்கு பதிலாக டொயோட்டா வெல்ஃபயர் காரை பயன்படுத்தும் அரசாங்கத்தின் முடிவு கேலிக்கு ஆளாகியுள்ளது.

அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பயன்படுத்தி வரும் புரோட்டோன் பெர்டானாவின் மாதாந்திர தவணைக் கட்டணத்தை  காட்டிலும் டொயோட்டா வெல்ஃபயர் காரின் மாதாந்திர கட்டணம் வெ.2.80 குறைவாக இருப்பதால் அதையே அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்த அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக நிதியமைச்சு ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவை பலர் விமர்சித்து வருவதோடு ‘அறிவுக்கு எட்டாத முடிவு’ எனவும் விமர்சிக்கின்றனர்.

புரோட்டோ பெர்டானா 2.4 பிரிமியம் காருக்கு மாதத் தவணையாக ஒரு மாதத்திற்கு வெ.4,854.41 செலுத்தப்பட்டு வருகின்ற நிலையில் டொயோட்டா வெல்ஃபர் 2.5க்கு மாதத் தவணையாக ஒரு மாதத்திற்கு வெ.4,851.61 செலுத்தப்படுவதால் மாதத்திற்கு வெ.2.80 சிக்கனப்படுத்த முடியும் என நிதியமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு ஸஃப்ரூல் கூறியுள்ளார்.

மாதத் தவணையை சிக்கனப்படுத்துவதாக கூறி அரசின் அதிகாரப்பூர்வ வாகனமாக டொயோட்டா வெல்ஃபயர் பயன்படுத்தப்பட்டால் அதன் சாலை வரி புதுப்பிற்கு வருடத்திற்கு வெ.5,000.00 செலவிட நேரிடும் என்பதை நிதியமைச்சு உணரவில்லை என்று மலேசிய வாடகைக் கார் சங்கத்தின் தலைவர் பஃரூக் பெர்னாண்டஸ் சாடியுள்ளார்.

வெறும் 2.80 வெள்ளியில் அரசாங்கம் சிக்கனத்திற்கான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டுமா? என்று பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெ.2.80 காசில் காட்டும் அக்கறையை அரசின் தேவையற்றற செலவீனங்களை குறைப்பதில் காட்டினால் நாட்டின் பொருளாதாரம் மீட்சி பெறும் எனவும் பலர் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply