ஸாகீர் நாய்க்கிற்கு கிடைக்கும் குடியுரிமை மலேசியர்களுக்கு எட்டாக்கனியா?- கணபதிராவ் (Video News)

Malaysia, News, Politics

 629 total views,  1 views today

சிறப்பு செய்தி: ரா.தங்கமணி

ஷா ஆலம்-

இந்நாட்டில் நிலவும் குடியுரிமை, அடையாள அட்டை இல்லாதோர் பிரச்சினையை தீர்க்க ஒரு முயற்சிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்தாலும் இவ்விவகாரம் முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்கதையாகவே நீண்டு கொண்டிருக்கும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் சாடினார்.

தங்களது பிள்ளைகளுக்கு குடியுரிமை, அடையாள ஆவணங்கள் எடுப்பதில் பெற்றோர்கள் காட்டும் அலட்சியமே அவர்களின் இத்தகைய பிரச்சினைக்கு காரணமாக அமைகின்றது.

அதுமட்டுமல்லாமல் தங்களது முறையற்ற திருமண பந்தம், பதிவு செய்யப்படாத திருமணங்கள் போன்ற காரணங்களும் குடியுரிமை விவகாரங்கள் தீர்க்கப்பட முடியாமல் நீண்டு கொண்டிருப்பதற்கு முக்கிய அம்சங்களாக அமைகின்றன.

குடியுரிமை விவகாரத்தில் மக்களிடையே நிலவும் அறியாமை, அலட்சியப்போக்கு ஆகியவை நீங்காத வரை குடியுரிமை, அடையாள அட்டை ஆவணப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாது என அவர் சொன்னார்.

புதிதாக குடியுரிமை, அடையாள அட்டை ஆகியவை கிடைக்கப்பெற்றவர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அவர், மேலும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மைசெல் பிரிவின் நடவடிக்கை

சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் குடியுரிமை, அடையாள அட்டை விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில் தமது கண்காணிப்பின் கீழ் திருமதி சாந்தா,ஆர்.ரகுபதி ஆகிய இரு அதிகாரிகளை கொண்டு மைசெல் பிரிவு செயல்பட்டு வருகிறது.

2018இல் தொடங்கப்பட்ட மைசெல் பிரிவின் வழி இது வரை 2,724 விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 758 விண்ணப்பங்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பங்கள் யாவும் பரிசீலனையில் உள்ளன. இந்த விண்ணப்பங்களில் சிவப்பு நிற அடையாள அட்டை 732, பிறப்பு சான்றிதழ் 416, குழந்தை தத்தெடுப்பு 251, குடியுரிமை 1,246, குடிநுழைவு துறை 79 என விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1100 மலாய்க்காரர்களும் 840 சீனர்களும் 668 இந்தியர்களும் 116 மற்றவர்களும் உள்ளடங்குவர்.

தொடரும் அலைகழிப்பு

இந்த விண்ணப்பங்கள் செய்யப்பட்டு சிலவற்றுக்கு தீர்வு கண்டாலும் பல விண்ணப்பங்கள் இன்னமும் நிலுவையிலேயே உள்ளன. பல்வேறு சாக்குபோக்குகள் சொல்லி பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதும் உண்டு. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குடியுரிமைக்கு விண்ணப்பித்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் அவை நிராகரிக்கப்படுகின்றன. அதற்கு பிறகும் அவர்கள் புதிதாக விண்ணப்பிக்கும் அவலம் தொடர்கிறது என்று கணபதிராவ் சொன்னார்.

இந்தியர்களை ஏமாற்றிய முஹிடின்

2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த பக்காத்தான்  ஹராப்பான் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின். ஆனால் இந்தியர்களின் குடியுரிமை விவகாரம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க தீவிரம் காட்டவில்லை.

பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை ஆவணப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் ஒன்றாக இருந்தது. ஆனால் அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருந்த டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்த 22 மாதங்களிலும் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காமல் அலைகழித்தே வந்துள்ளார்.

ஸாகீர் நாய்க்-கிற்கு குடியுரிமை கிடைக்குபோது…

இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த எத்தனையோ பேர் குடியுரிமை, அடையாள அட்டை ஆவணங்களுக்காக அல்லல்படும் நிலையில் சமய போதகரான ஸாகீர் நாய்க்கிற்கு மட்டுமே உடனே நிரந்தர வசிப்பிட தகுதி எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஒரு நாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஸாகீர் நாய்க்கிற்கு இந்நாட்டில் நிரந்தர வசிப்பிட தகுதி வழங்குவதற்கு எவ்வித கெடுபிடியும் காலதாமதமும் செய்யப்படாத நிலையில் இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து வருபவர்களுக்கு அரசாங்கத்தின் கரிசனம் கிடைக்காதது ஏன்?

குடியுரிமை, அடையாள அட்டை ஆவணங்கள் அனைத்தும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு மனிதநேய அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமே தவிர மதத்தின் அடிப்படையில் அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்திற்கு முன் பிறந்தவர்கள்…

நாடு சுசுந்திரம் அடைவதற்கு முன்பாக இந்நாட்டில் வசித்த மூத்த குடிமக்களுக்கு குடியுரிமை, அடையாள அட்டை கிடைக்கப்பெறுவதில் கடுமையான போக்கு கடைபிடிக்கப்படாமல் இலகுவான முறையில் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட வேண்டும் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.

Leave a Reply