15ஆவது பொதுத் தேர்தலின்போது பெருமழை பொழியலாம் !

Malaysia, News, Politics, Polls

 92 total views,  1 views today

இரா. தங்கமணி

கோலாலம்பூர் – 20/10/2022

15ஆவது பொதுத் தேர்தல் நடத்தப்படும் காலகட்டத்தில் நாட்டில் பெருமழை பொழியலாம் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

நவம்பர் மாத மத்தியில் பெருமழை பொழியலாம் எனவும் அதனை தொடர்ந்து பல மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் எனவும் தேசிய வானிலை துறை எச்சரித்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்ற நிலை தேர்தல் காலகட்டத்தின் போது நிகழலாம் என்று டத்தோ மாலிக் இம்தியாஸ் சர்வார் தெரிவித்தார்.

கடந்தாண்டு நிகழ்ந்த வெள்ளப்பெருக்கில் 54 பேர் மரணமடைந்த நிலையில் 117,000 பேர் தங்களை வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், 6.1 பில்லியன் வெள்ளி வரையிலான நஷ்டம் ஏற்பட்டது என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சார்ல்ஸ் சந்தியாகோ தொடுத்த வழக்கு விசாரணையின்போது அவர் இவ்வாறு கூறினார்.

15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பாக சார்ல்ஸ் சந்தியாகோ தொடுத்த வழக்கு விசாரணை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ அஹ்மாட் கமால் முகமட் சாஹிட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பிரதமர், மலேசிய தேர்தல் ஆணையம், மலேசிய அரசாங்கம் ஆகியவற்றுக்கு எதிராக சார்ல்ஸ் சந்தியாகோ வழக்கு தொடுத்திருந்தார்.

சார்ல்ஸ் சந்தியாகோவின் வாதம் அறிவுக்கு பொருந்தாத ஒன்று என்று பிரதமர், மலேசிய அரசாங்கம், மலேசிய தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார்.

இவ்வழக்கின் முடிவு வரும் 28ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

Leave a Reply