
2023 பட்ஜெட் – அனைத்து அமைச்சுகளிலும் உள்ள வாய்ப்புகளை இந்திய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ! – டாக்டர் குணராஜ் வேண்டுகோள்
256 total views, 2 views today
கிள்ளான் | 26-02-2023
இரு தினங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு நேரடியாக பலன் தரக்கூடிய சில பிரத்தியேகத் திட்டங்களை அறிவித்தற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாக செந்தேசா சட்டம்மன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.
அதே சமயம், அனைத்து அமைச்சுகளின் வாயிலாகவும் வழங்கப்படும் சமூக, பொருளாதார மற்றும் கல்வி சார்ந்த வாய்ப்புகளை இந்திய சமூகம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
வழக்கம் போல் இவ்வாண்டு பட்ஜெட்டிலும் மித்ரா, தெக்குன் போன்ற திட்டங்களுக்கு மட்டுமே மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து பலர் தங்களின் ஏமாற்றதை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விஷயத்தை நாம் குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. மற்ற அமைச்சுகள் வாயிலாக வழங்கப்படும் அனைத்து இனங்களுக்குமான திட்டங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த வரவு செலவுத் திட்டம் மலேசியர்களுக்கானது. அனைத்து இனங்களும் பயன்தரக்கூடிய வகையில் 38,810 கோடி வெள்ளி பட்ஜெட்டை பிரதமர் தாக்கல் செய்துள்ளார். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அந்தந்த அமைச்சுகளின் வாயிலாக பல்வேறு திட்டங்கள் அமல்ப்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டங்கள் தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட் அமைச்சுகளின் அகப்பக்கம் வாயிலாக அல்லது மக்கள் பிரதிநிதிகளின் சேவை மையங்கள் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய சமூகத்திற்கான மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகருமான அவர் சொன்னார்.
மனிவள அமைச்சின் எச்.டி.ஆர்.எப். தொழில் திறன் பயிற்சிகள், விவசாய மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் வேளாண் மற்றும் கால்நடை வளர்ப்பு பயிற்சி திட்டங்கள், கல்வியமைச்சின் வாயிலாக கல்வி, மற்றும் தொழில்கல்வி வாய்ப்புகள் போன்றவற்றை உதாராணமாக கூறலாம் என்றார் அவர்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவுக்கு 10 கோடி வெள்ளி வழங்கப்பட்ட வேளையில் தெக்குன் எனப்படும் தொழில்முனைவோர் கடனுதவித் திட்டத்திற்கான ஒதுக்கீடு 2 கோடி வெள்ளியிலிருந்து மூன்று கோடி வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர முதன் முறையாக இந்த பட்ஜெட்டில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 5 கோடி வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது.