7ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்து கல்லறை விழா

Malaysia, News

 167 total views,  2 views today

ரா.தங்கமணி

கிள்ளான், அக்.19-

சிலாங்கூர் இந்திய சமூக நலன் மரண சகாய இயக்கத்தின் இந்து கல்லறை விழா அண்மையில் நடத்தப்பட்டது.

நம் முன்னோர்களின் நினைவாக நம்மிடம் எஞ்சியிருப்பது அவர்கள் துயில் கொள்ளும் இந்த கல்லறைகள் தாம். அத்தகைய கல்லறைகளை நம்மில் எத்தனை பேர் முறையாக பராமரிக்கின்றோம் என்பது மிகப் பெரிய கேள்வியாகும்.

அவ்வகையில் கிள்ளான், சிம்பாங் லீமா இந்து மயானத்தில் இவ்வியக்கத்தினர் ஏற்பாடு செய்தனர். இயக்கத்தினரும் பொது  மக்களும் திரண்டு  இங்குள்ள கல்லறைகளை தூய்மை செய்து பூங்கொத்தை நட்டு வைத்து அங்கு துயில் கொள்ளும் ஆன்மாக்களை வணங்கி மரியாதை செலுத்தியதாக இயக்கத்தின் தலைவர் டத்தோ தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த 7 ஆண்டுகளாக இந்து கல்லறை விழாவை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தங்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் மரணத்திற்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் இந்த கல்லறையை பராமரித்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, இந்நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், இந்த இயக்கம் மேற்கொண்டு வரும் பல நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்வது, மரணமடைந்த ஆன்மாக்களுக்கு திதி கொடுப்பது, கல்லறைகளை துப்புரவு செய்வது என்று இயக்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைள் பாராட்டுக்குரியதாகும்.

பல இயக்கங்கள் அரசு மானியங்களை பெற்றுக் கொண்டு கண்துடைப்புக்கு ஒரேயொரு நிகழ்ச்சியை நடத்தி முடித்து விடும் நிலையில் இதுவரை அரசு மானியம் கோராமல் தன்னால் ஆன வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வரும் டத்தோ தட்சிணாமூர்த்தி, அவர்தம் குழுவினர் சமூகப் பணி தொடர வேண்டும் என்று கணபதிராவ் வலியுறுத்தினார்.

Leave a Reply