9ஆவது பிரதமர்; எண்கள் செய்யும் மாயஜாலம்

Uncategorized

 151 total views,  2 views today

செய்தி: குமரன்

கோலாலம்பூர்-

எண்கள் விளையாட்டு, தற்போதைய மலேசிய அரசியல் சூழலில் நாட்டின் அடுத்தப் பிரதமரை முடிவு செய்யப்போகும் விடுகதை. இந்த விடுகதைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல, அரசியல் கள கவனிப்பாளர்களும் மக்களும் சேர்ந்து விடை அறியக் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் தான்ஶ்ரீ மகியாட்தீன் முகம்மது யாசின் விட்டுச் சென்றுள்ள அந்தப் பதவியை அலங்கரிக்க இருப்பது யார் ? சில பெயர்கள் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படுகின்றன.

ஒரு வேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணம் மாறுபட்டால் பெர்டானா புத்ராவை அலங்கரிக்கப்போவது அந்தப் பெயர்களாக இருக்காது.

பல விதமான ஆருடங்கள் மேலோங்குகின்றன.

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்

மகியாதீன் இழந்த 15 அம்னோ உறுப்பினர்களினாதரவை டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் மீட்டுக் கொண்டு வர முடியுமேயானால், கண்டிப்பாகப் பெரும்பான்மை ஆதரவோடு பிரதமர் பதவியை அலங்கரிக்கலாம்.

அம்னோவின் அனைத்து 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த முடிவாக அவருக்கு ஆதரவு அளித்தால், 115 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ஆட்சி பீடத்தில் அமரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்த எண்ணிக்கையானது பெர்சத்துவின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஸ்-இன் 18, ஜிபிஎஸ்-இன் 18, சுயேட்சை 4 பேர், மசீசவின் 2, ம.இ.கா.வின் 1, பிபிஆர்எஸ்-இன் 1 பிபிஎஸ்-இன் 1, ஸ்டார்-இன் 1 ஆகியவற்றை உட்படுத்தியதாகும்.

தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின்

பதவி விலகியிருந்தாலும் அரசியலில் இருந்து விலகவில்லை எனக் கூறியிருக்கிறார்.

மேலும், தாம் மீண்டும் பிரதமராக நியமிக்கப்படும் விவகாரத்தில் மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

காப்பேற்புப் பிரதமர் தான்ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினிடமிருந்து ‘நற்செய்தி’ஒன்று வரும் என பெர்சத்துவின் தகவல் பிரிவு தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.

நேற்று உத்துசான் மலேசியாவுக்கு வழங்கிய பேட்டியில், அதனை இன்று மகியாதீனே தெரிவிப்பார் எனவும் தாம் அதனைக் கூறுவது முறாஇயன்று எனவும் தெரிவித்தார்.

டத்தோஶ்ரீ அன்வார் இபுராகிம்

எதிர்க்கட்சித் தலைவரான இவர், நம்பிக்கைக் கூட்டணியின் ஒட்டுமொத்த  88 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளார்.

ஜ.செ.க – 42, பிகேஆர் – 35, அமானா – 11 ஆகியவற்றின் கூட்டுத்தொகையே அந்த 88 ஆதரவாளர்கள்.

மேலும், சிம்பாங் ரெங்காம் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மஸ்லீ மாலிக்கும் அன்வாருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது,

ஆக, இதரக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் 89 ஆதரவாளர்களைக் கொண்டு ஆட்சி அமைக்க முடியாது.

வாரிசானின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெஜுவாங் கட்சியின் 4, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினரான ஷேட் சாடிக் (1) ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும் கூட 102 ஆதரவாளர்களை அன்வார் இபுராகிம் கொண்டிருப்பார்.

அம்னோவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபா, சரவாக் மாநிலக் கட்சிகளும் அன்வாருக்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில், அவ்வெண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்.

டத்தோ ஶ்ரீ ஷாஃபி அஃப்டால்

சபா மாநிலத்தில் மிகவும் ஆளுமை நிறைந்த பெயர். அண்மையக் காலமாக நாட்டின் முக்கியமானப் பதவியை வகிக்கக் கூடியவர் என கூறப்படுகிறார்.

அரசு நிர்வாகத்தில் பரந்த அனுபவம் மிக்க முகம்மட் ஷாஃபி, தம்மீது நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவு திரட்டப் பெரும் சவாலை எதிர்கொள்வார்.

ஒரு வேளை, நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவு முகம்மட் ஷபஃபி அப்டாலுக்குக் கிடைக்குமாயின், 100க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன் வசம் கொள்வார்.

வாரிசானின் 8, நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளான ஜ.செ.க. 42, , பிகேஆர் – 35, அமானா – 11, பெஜுவாங் – 4, சுயேட்சை (2) ஷேட் சாடிக், டாக்டர் மஸ்லீ மாலிக் ஆகியவற்றை உட்படுத்தியதாகும்.

ஜிபிஎஸ், பாஸ், இதர சிறிய கட்சிகளான பிபிஆர்எஸ், பிபிஎஸ், ஸ்டார், பிஎஸ்பி ஆகியக் கட்சிகள் இன்னும் சேர்க்கப்படவில்லை.

ஒரு வேளை அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணி ஆட்சிக்கானப் பெரும்பான்மையை உருவாக்கவில்லை என்றால் நாடாளுமன்றம் தொக்கி நிற்கும்.

தொக்கி நிற்கும் நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ பெரும்பான்மை இல்லாமல் போனால் அது தொக்கி நிற்கும் நாடாளுமன்றம்.

இதனால், நாடாளுமன்றத்தையோ செயலாக்கத் தரப்பையோ இயக்கக் கூடிய அதிகாரம் அற்ற நிலை என்றும் சொல்லலாம்.

இப்படி ஒரு சூழல் ஏற்படும்போது பெரும்பான்மை இழந்த கூட்டணியில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையோ அல்லது வேறு கட்சிகளையோ இணைத்துக் கொண்டு பெரும்பான்மையை உருவாக்கலாம்.

அதே நேரம் சிறுபான்மை அரசாங்கத்தையும் உருவாக்கலாம். அதாவது, அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஆட்சி அமைக்க முடியும், அதற்கு இதர கட்சிகளும் கூட்டணிகளும் ஆதரவு தெரிவித்து ஒப்புக்கொண்டிருக்க வேண்டும்.

கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, பெரும்பான்மை ஆதரவு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அமைச்சரவைக்குத் தலையேற்று பிரதமராக மாமன்னர் நியமிக்க வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை தான்ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் மலேசிய அரசியல் சூழலில் நெருக்கடி மேலும் அதிகரித்தது.

அந்தப் பதவி விலகலை மாமன்னர் ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply